இவ்வருடம் இலங்கை வருகைதந்த சுற்றுலாப் பயணிகளில் 24 வீதமானோர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர் – இலங்கை சுற்றுலாத்துறை தகவல்!

Saturday, February 26th, 2022

இந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் ஏறத்தாழ 24 வீதமானோர்  ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலாத்துறையின் உத்தியோகபூர்வ தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

எதிர்பார்த்தபடி, இலங்கைக்கு வரும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ரஷ்யாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இதனிடையே சுமார் 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்கள் 30 நாட்களுக்காக இந்நாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த சுற்றுலாப் பயணிகளின் விசா 30 நாட்களில் காலாவதியாகிவிடும். எவ்வாறாயினும், உக்ரேனில் நிலவும் மோதல் காரணமாக இலங்கையில் தங்க விரும்பும் சுற்றுலா பயணிகளின் விசாவை நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலா அமைச்சு சம்பந்தப்பட்ட பயண முகவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் விசா காலாவதியான பின்னர் உக்ரைனுக்கு நேரடி விமான சேவைகள் இருக்காது என்பதால் அவர்கள் வேறு நாடுகளின் ஊடாக அவர்களின் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் முகவர் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: