இந்தியாவின் ஆதரவே இலங்கையின் பொருளாதாரம் நிலைத்திருப்பதற்கு காரணம் – இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Friday, January 27th, 2023

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் ஆதரவு, அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது என்று இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இதனை த ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா, உரிய நேரத்தில் இலங்கைக்கு உதவியளித்து இலங்கையின் பொருளாதார உயிர்வாழ்தலை உறுதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இலங்கைக்கான உதவியை உறுதிப்படுத்தியுள்ளதாக மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கையின் பொருளாதாரம் நிலைத்திருப்பதற்கு இந்தியா வழங்கிய ஆதரவே காரணம் என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். யாரும் தலையிடாத போது இந்தியாவின் ஆதரவு கிடைத்தது.

சர்வதேச நாணய நிதியத்திடம் சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனுக்காக இலங்கை சென்றுள்ளது. அது பல நிபந்தனைகளுடன் பல ஆண்டுகளாக வழங்கப்படும். அதனுடன் ஒப்பிடுகையில், இந்தியா உண்மையில் எங்களுக்கு 3.9 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. சீனா மற்றும் பெரிஸ் கிளப்புக்கு முன்னதாக இந்தியாவே இந்த உதவியை வழங்கியுள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் இந்தியாவின் முதலீடு, சுற்றுலா மற்றும் வர்த்தகம் என மூன்று முக்கிய பகுதிகளில் இருக்கவேண்டும் என்று தாம் கருதுவதாக மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் கப்பல் விடயத்தை அடுத்து எழுந்த பிரச்சினை குறித்து கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் வரலாறு முழுவதிலும், நாடு, பெரும் சக்திகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பாதுகாப்பு பிரச்சினைகள் வரும்போது, இந்தியாவின் பாதுகாப்பே இலங்கையின் பாதுகாப்பாகும் என்றும் மிலிந்த மொரகொட கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: