தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை,பாதுகாப்பின் பெயரால் கைப்பற்றிய நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் -நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 8th, 2016

எமது நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் காணப்படுகின்ற சனத்தொகைக்கு ஏற்றவாறும், விகிதாசார அடிப்படையிலேயே பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும், தேவை அடிப்படையில் நிலை கொண்டிருக்க வேண்டும் என்ற விடயத்தை நான் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி விவகார அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

தற்போதைய நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்;லாத நிலையில், மேற்படி நிலைப்பாட்டினை வடக்கு மாகாணத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், அங்குள்ள அரச காணிகள் இனங்காணப்பட்டு, அவற்றில் அந்தப் படையினரைக் குடியமர்த்தி,  எஞ்சியிலுள்ள எமது மக்களின் குடியிருப்புக் காணிகளும், செழிப்பான வளங்களைக் கொண்ட விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த கேந்திர இடங்களும் எமது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டினை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே போன்று, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இதே நிலையே காணப்படுகின்றது. அந்த வகையில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும், பௌதீக வசதிகளின் அடிப்படையில் படையினரைப் பரந்தளவில் நிலைகொள்ளச் செய்ய முடியும். ஏதாவது பாதுகாப்புத் தேவைகள் ஏற்பட்டால் இலங்கையில் எந்தவொரு பகுதியிலிருந்தும் இராணுவத்தை வரவழைப்பது என்பது அந்தளவுக்கு கடினமான காரியமல்ல என்றே கருதுகின்றேன்.

அதே நேரம், படையினர் பல்வேறு சமூக மற்றும் மனிதாபிமான அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது வரவேற்கத்தக்க அம்சமாகவே தொடர்கிறது. அதே நேரம் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியுமென்றே நான் கருதுகின்றேன். அதே நேரம், இலங்கை இராணுவமானது ‘சிங்கள இராணுவம்’ என்ற கருத்தியலே எமது மக்களில் பலர் மத்தியில் இன்னும் நிலவுகின்றது. இதனை மாற்றி,‘இலங்கை இராணுவம்’ என்ற கருத்தியலைத் தமது செயற்பாடுகள் மூலமாக எமது மக்கள் மத்தியில் உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும் எனக் கருதுகின்றேன்.

அடுத்ததாக, இயக்கச்சிப் பகுதியில் தனியார் காணிகளில் அடுத்தடுத்து மூன்று இராணுவ முகாம்கள் அமையப் பெற்றுள்ளன. இந்தக் காணி உரிமையாளர்கள் தமது காணிகளைப் பல வருட காலமாகக் கோரி வருகின்ற நிலையில், இந்த முகாம்களை ஆணையிறவு பகுதியிலுள்ள அரச காணிகளுக்கு மாற்றக்கூடிய நடவடிக்கைகள் ஆராய்ந்து பார்க்குமாறும், இவ்வாறான முகாம்களின் பெயர்ப் பலகைகளில் மும்மொழிப் பிரயோகங்களை மேற்கொள்ளுமாறும், பல்லின கலாசார பண்பாடுகளையும் பேணுகின்ற வகையில் அந்த அமைவிடங்களை வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-2 copy

Related posts:


இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்!... பொங்கல் வாழ்த்...
சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய பேருவளை துறைமுகத்தின் செயற...
கிளிநொச்சியில் வறுமை மாவட்டமாக இருப்பது ஏன்? - உண்மையை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!