உழைப்பவர் உரிமைகள் வென்றிட,.. தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிட,. தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்!… – மே தினச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, May 1st, 2021

உழைக்கும் மக்களின் உரிமைகள் சகலதும் வென்றிடவும், அரசியலுரிமையிலும் அபிவிருத்தியிலும் அன்றாட வாழ்விலும்  தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிடவும் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேதின செய்தியில் தெவித்துள்ளார்.

மேலும் அந்த செய்தியில்,..

‘நாம் தமிழ் தேசிய இனத்தின் தேச விடுதலைக்காக மட்டும் போராட எழுந்தவர்கள் அல்ல,.தமிழ் சிங்கள முஸ்லிம் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையின் எழுச்சியையும்,. ஒன்று பட்ட இலங்கைத்தீவின் ஒட்டு மொத்த புரட்சியையுமே எமது ஆரம்பகால இலட்சிய கனவாக நாம் கொண்டிருந்தவர்கள்.

எமது நெடுங்கனவை நிஜமாக்க நெஞ்சில் உறுதி கொண்டு நாம் எமது நீதியான உரிமைப்போராட்டக் களத்தில் அன்று நின்றிருந்தோம்.

தமிழர் தேசத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கப்பட்டதால் எமது உரிமை போராட்டம் அழிவு யுத்தமாக திசை மாறிச்சென்ற நிலையில்,..

நாமும் அடுத்தவர்கள் போல் ஆற்றோடு அள்ளுண்டு போகாமல் எதிர் நீச்சலிட்டு, தீர்க்கதரிசனமாக எமது இலட்சிய பயணத்தின் பாதையை மாற்றியிருந்தோம். பாதைகள் மாறினாலும் எமது இலக்கு நோக்கிய பயணம் நின்றுவிடவில்லை.

எமது தேசிய நல்லிணக்க பாதையில்,.. உழைக்கும் மக்களின் வாழ்வில் ஒளியேற்ற நாம் முன்னெடுத்த திட்டங்களையும் செயல்களையும்

வறிய மக்களுக்கு நாம் வழங்கும் நிரந்ததர வாழ்வியல் உரிமைகளையும் வெறும் சலுகைகள் என எம்மீது அவதூறுகளை பொழிந்தவர்கள்,

தமக்கு கிடைத்த அரசியல் பலத்தின் அதிகாரங்களை வைத்து  தமது சொந்த சலுகைகளுக்கு மட்டுமே விலை போனார்கள்.

அரசியல் தீர்வு குறித்து, மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வில் இருந்து தொடங்குவோம் என நாம் இடையறாது வலியுறுத்தி வந்த போது,

அதை அரை குறைத்தீர்வென்று எம்மை எள்ளிநகையாடியவர்கள் இன்று ஐ.நா வே அதை பரிந்துரையாக தெரிவித்திருக்கும் நிலையில்,

ஐ. நா வை காட்டி எமது மக்களை ஏமாற்ற நினைத்தவர்கள் இன்று ஐ. நா. தம்மை ஏமாற்றி விட்டதாக புலம்புகின்றனர்.

 சிலர் எமது தீர்க்கதரிசன அரசியல் ஜதார்த்த வழிமுறையை ஏற்க தயாராகியும் விட்டனர். வரவேற்போம்!…

உழைக்கும் மக்களே!,..ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் மக்களே!! ஒன்று படுங்கள்,.. இதுவே உலகத்தொழிலாளர் தினத்தின் உரிமைக்குரல்!

அதை நிஜமாக்க,..இன்றுள்ள உலக, உள்நாட்டு  ஜதார்த்த அரசியல் நிலைமைகளை உணர்ந்து   தமிழ் தேசிய இனத்தின் நிரந்தர அரசியல் உரிமைகளை வென்றெடுக்க  மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வில் இருந்து தொடங்கி இறுதி இலக்கு நோக்கி முன்னோக்கி செல்வோம்!..

எமது நிலத்தில், மக்கள் எமக்கு வழங்கும் அரசியல் பலத்தில் எமக்கு கிடைக்கும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்று அவர்களது வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம்.

 தேசிய நல்லிணக்க கதவுகளை மூடி விட்டு எழுப்பும் போலி உரிமை குரல்களால் எந்த கோட்டையின் கதவுகளும் திறக்காது. இதுவே தமிழர் தேசத்தின் அனுபவம்.

தீராப்பிணிகள் என்று எவையுமில்லை. நம்பிக்கையுடன் கொடிய  நோய் பிணிகளை கடந்து செல்வோம்.

உழைக்கும் மக்களின் உரிமைகள் வெல்லட்டும்! தமிழர் தேசம் தலை நிமிரட்டும்!!’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

00

Related posts:

நெல் அறுவடைக்கான இயந்திரங்கள் தொடர்பிலான டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றது விவசாய அமைச்சு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவின் க...
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா ...

உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் - நாடாளும...
உங்கள் எதிர்காலம் உங்கள் கரங்களில் : வழிகாட்டியாக நான் இருக்கிறேன் என்னுடன் கைகோருங்கள்-கிளி.கல்மடு ...
புரவி புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விபரங்கள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ...