தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தேவை – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 15th, 2017
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் நாட்களையும், வாரங்களையும் பிரகடனப்படுத்தி அவற்றை அனுஸ்டித்து வருவதால் மாத்திரம் இந்த நாட்டில் தேசிய ஒருமைப்பாடோ அல்லது தேசிய நல்லிணக்கமோ எமது மக்களிடையே உணர்வுப்பூர்வமாக ஏற்பட்டுவிடப் போவதில்லை. அதற்கு உரிய துறைகளை இனங்கண்டு அந்தத் துறைகளை ஏற்ற வகையில் ஒழுங்கமைப்புச் செய்ய வேண்டியுள்ளது. அந்த வகையில், அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறியிருந்ததைப் போல் தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அறநெறிக் கல்வி ஒரு சிறந்த ஆரம்பம் எனத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், எமது நாட்டில் அறநெறிக் கல்வியை ஊக்குவித்து வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த 01ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சர்வமத அறநெறிப் பாடசாலைகளின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் சமயக் கல்விக்கு முக்கியப் பொறுப்பு உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இது வரவேற்கத்தக்க கருத்தாகும். தேசிய ஒருமைப்பாடு, தேசிய நல்லிணக்கம் என்பவை எமது நாட்டில் பல்வேறு துறைகள் சார்ந்தும் ஓர் ஒழுங்கமைப்புடன் கட்டியெழுப்பப்பட வேண்டியதாகும். அந்த வகையில், கல்வித்துறை இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அதிலும், அறநெறிக் கல்வி மிகவும் முக்கியமானது. எனவே, எமது நாட்டில் அறநெறிக் கல்வியை ஒழுங்குற வழங்குவதற்கு ஏற்ற வகையில் அத்துறை ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, இந்து சமய அறநெறிப் பாடசாலைகள் மற்றும் இஸ்லாமிய மத்ரஸாக்கள் போன்றவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை பரவலாக மேம்படுத்தி, பௌதீக வளங்கள் வழங்கப்பட்டு, அவற்றில் போதிக்கின்ற பணியை மேற்கொள்வோருக்கு போதுமான மாத ஊதியத்தை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும். எனவே, இதற்கென ஒரு தேசிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக, தற்போது பௌத்த மத  கல்விக்கென வழங்கப்படுகின்ற அரச உதவிகள் இந்து மற்றும் இஸ்லாமிய அறநெறிக் கல்வித்துறை சார்ந்து கிடைக்காத ஒரு சூழ்நிலையே காணப்படுகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
அதேபோன்று எமது பாசாலை பாடநூல்களிலும் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியுள்ளது. இது தொடர்பில் நாங்கள் தற்போது அந்தந்த துறைகள் சார்ந்த தமிழ் பேராசிரியர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
DD11

Related posts:


இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில்...
நீண்டகாலமாக இருந்து வந்த பாரிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது – வணிக கப்பற்றுறை கப்பற்று...
அராசாங்கத்திற்கான உற்சாகமூட்டல்களே எதிரணியின் போராட்டங்கள் - வைராக்கியத்துடன் எதிர்கொள்வோம் என்கிறார...