மாணவர்களின் இலட்சியக் கனவுகள் ஈடேறவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 2nd, 2016

க.பொ.த உயர்தர பரீட்சை இன்றையதினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இடர்பாடுகளையும் துன்பங்களையும் தைரியத்தடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொண்டு பரீட்சையில் மட்டுமல்லாது எமது மாணவர்கள் வாழ்வியலும் முன்னேற்றம் காணவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்காக மாணவர்கள் தம்மை தயார்ப்படுத்தியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அசௌகரியங்களையோ இடையூறுகளையோ ஏற்படுத்தாது  அதற்கான ஏதுநிலைகளை பெற்றோர்கள் அனைவரும் ஏற்படுத்திக்கொடுக்க முன்வரவேண்டும்.

துயரங்களையும் துன்பங்களையும் மாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேற்றம் காணவேண்டும் என்பதுடன் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கும் கல்வியை தமது மகத்தான செல்வமாக உணர்ந்து செயற்பட வேண்டும். அப்போதுதான் வாழ்வில் மேம்பாடு காண முடியும்.

க.பொ.த உயர்தர பரீட்சை என்பது மாணவர்களுக்கான முக்கிய கட்டமாக அமைந்துள்ளபடியால் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் பரீட்சைக்கு தோற்றி இலட்சிய கனவுகளை ஈடேற்றும் உயர்ந்த எண்ணத்துடன் மாணவர்கள் பரீட்சையை எதிர்கொள்வதற்கு திடசங்கற்பம் பூணவேண்டும்.

முன்னொரு காலத்தில் கல்வித்துறையில் பெருமை பெற்று விளங்கிய வடமாகாணம் இறுதியாக கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின்படி  பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளதாக அறியமுடிகின்றது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும்.

நாட்டில் நிலவிய யுத்த காலத்தில் கண்டிராத கல்வித்துறையின் வீழ்ச்சியானது தற்போது ஏன் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஆராயப்படவேண்டியது அவசியமானதாகும். இது விடயத்தில் வடக்கு மாகாணசபை அக்கறையற்றிருக்கும் அதேவேளை உரிய முறையில் அவதானம் செலுத்தாமல் உள்ளமையும் தமக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: