தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை உறங்கப்போவதில்லை – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 10th, 2018

தீவகம் உள்ளிட்ட குடாநாட்டு மக்கள் பட்டினிச்சாவை  எதிர்கொண்டிருந்தபோது தோள்களிலே மூட்டை சுமந்து உணவு கொடுக்க வந்ததிலிருந்துதான் நாம் எமது அரசியல் நீரோட்டத்தை ஆரம்பித்திருந்தோம். அந்தவகையில் இன்றுவரை தீர்க்கப்படாதிருக்கும் எமது மக்களின் இலட்சியக் கனவுகள் நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறையில் இன்றையதினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நான் யாழ் குடாநாட்டுக்கு வந்திருக்காவிட்டால் வன்னியில் எமது மக்கள் எவ்வாறான அவலங்களைச் சந்தித்திருந்தார்களோ அதே அளவு அவலங்களும் துயரங்களும்  யாழ் குடாநாட்டு மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனாலும் குறைந்த உயிர் உடமை இழப்புகள் ஏற்பட்டிருந்தபோதிலும் மனிதப் பேரவலத்திலிருந்து எமது மக்களுக்கு பாதுகாப்பை வழங்கியிருந்தவர்கள் நாம் என்பது தமிழர் வரலாற்றில் நிச்சயம் பொறிக்கப்படும் என்பது  யதார்த்தமானது.

அந்தவகையில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் எமது மக்களின் அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரையில் நாம் கொண்ட கொள்கையில் இம்மியளவும் பிசகாது உறுதியுடன் உழைக்கக் காத்திருக்கின்றோம்.

நாம் அரசியல் நீரோட்டத்தில் காலடியெடுத்துவைத்ததிலிருந்து இன்றுவரை பல்வேறு நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் சேறுபூசல்களையும் எதிர்கொண்டு எமது மக்களுக்காக அயராது பெரும்பணியாற்றியிருக்கின்றோம். அந்தவகையில் இன்றும் தீர்க்கப்படாது  தொடர்ந்துகொண்டிருக்கும் எமது மக்களது இலட்சியக் கனவுகளை எமது நெஞ்சங்களில் சுமந்தவாறு உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

நாம் தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயங்களை  மக்களிடம் எடுத்து சொல்லி வெற்றிபெறுபவர்கள் அல்ல. நடைமுறைச் சாத்தியமான விடயங்களை கூறியே மக்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கின்றோம். ஆனால் ஏனைய இதர தமிழ்க் கட்சிகள் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு கூட்டுச்சேர்ந்து கேட்கிறார்கள். அது வெறும் தேர்தல் வெற்றிக்கானதான கூட்டே தவிர மக்களது நலன்களுக்கானதாக ஒருபொதும் அமைந்தது கிடையாது.

இன்றைய சூழல் எமக்கு சாதகமாக உள்ள நிலையில் இந்த அரிய வாய்ப்பினை எமது மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி எமக்கு அரசியல் அதரவுப் பலத்தை தருவார்களேயானால் நாம் எமது மக்களது அனைத்துவிதமான பிரச்சினைகளுக்குமான இலட்சியக் கனவை ஈடேற்றும் வகையில் தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு உழைப்போம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts:

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் -  டக்ளஸ் தேவானந...
மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களை நான் செயல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது – ஊடகவியலாளர் சந்திப...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு - ஒலுவிலில் மீன்பிடித் துறைமுகத்தை செயற்படுத்த...