தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு மகஜன எக்சத் பெரமுன முழுமையான பங்களிப்பை வழங்கும் என நம்புகிறேன் – 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் டக்ளஸ் எம்.பி. நம்பிக்கை!

Sunday, February 17th, 2019

இலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு மிகுந்திருந்த காலகட்டத்தில், மகஜன எக்சத் பெரமுன – மக்கள் ஐக்கிய முன்னணியின் பங்களிப்பானது அதனுள் பாரியதாகவே இருந்து வந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்;.

கொழும்பில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் ஐக்கிய முன்னணியின் 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கெளரவ நாடாளுமன்ற உறுப்பினரும் மகாஜன எகசத் பெரமுனவின் தலைவருமாகிய தினேஷ் குணவர்த்தன அவர்களின் அழைப்பை ஏற்று நான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.

இந்த மாநாட்டில் எடுக்கும் தீர்மானங்கள் வளமான இலங்கைத்தீவின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.

இரத்த தீவாக இருந்த இலங்கைத்தீவில் பாலாறும் தேனாறும் பாய்ந்தோடும் பசுமையை உருவாக்க வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர்  என சங்க இலக்கிய தமிழ் புலவர்  கணியன் பூங்குன்றனார் கூறியது போல், இலங்கைதீவில் வாழும் அனைத்து இன சமூக மதம் சார்ந்த மக்கள்  யாவரும் ஒருவரை ஒருவர் மதித்து வாழும் நிலையை வளர்த்தெடுக்க வேண்டும். இன ஐக்கியமும், இன சமத்துவமும் இங்கு வளர வேண்டும். 

அதற்காக தினேஷ் குணவர்த்த அவர்களும் அவரது கட்சி சார்ந்தவர்களும்  உழைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.  அது மட்டுமன்றி  இன்னொரு வரலாற்று கடமையும் தினேஷ் குணவர்த்தன அவர்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது. 

ஜனாதிபதி ikத்திரி பால சிறீ சீனா அவர்களையும் முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களையும் இணைக்கும் ஓர் உறவுப்பாலமாகவும் அவர் செயலாற்ற வேண்டும். 

நாட்டின் அரசியல் தலைவர்களை தீர்மானிக்கின்ற உறுதிமிக்க சக்தியாகத் திகழ்ந்துள்ள மகஜன எக்சத் பெரமுன – மக்கள் ஐக்கிய முன்னணி கட்சியானது, அதன் ஆரம்ப காலகட்டத்தில் பல்கலைக்கழக மட்டங்களில் – குறிப்பாக பேராதெனிய பல்கலைக்கழக மட்டத்தில் பலம்வாய்ந்த சக்தியாகவே திகழ்ந்து, வளர்ச்சி பெற்றிருப்பமை குறிப்பிடத்தக்கதாகும்.

60 ஆண்டுகள் பழைவாய்ந்த கட்சியாக, அன்று முதல் இன்று வரையில் இந்த நாட்டு மக்களின் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அக்கட்சி செயற்பட்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அமரர்களான பிலிப் குணவர்தன, விலியம் டி சில்வா ஆகியோரால் பிலிப் குணவர்தன அவர்களது சிந்தனைக்கு அமைவாக உருவாக்கப்பட்ட இக் கட்சி, இன்று கௌரவ திணேஸ் குணவர்தன அவர்களால் மிகவும் சிறந்த முறையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இன்று இந்த நாடு முகங்கொடுத்துள்ள பல்வேறு நெருக்கடி நிலைமைகளுக்கு முன்பாக, எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவான சிந்தனை கொண்டுள்ள மகஜன எக்சத் பெரமுன – மக்கள் ஐக்கிய முன்னணி கட்சியானது, நடைமுறை சாத்தியமான வழிகளில் பிரச்சினகளுக்கான தீர்வுகளை எட்டுவதில் சிரத்தை காட்டி வருகின்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது.

இன்று இந்தக் கட்சியை வழிநடத்துகின்ற அரசியல் ஆளுமை, அனுபவம், முதிர்ச்சி, ஆற்றல் அனைத்தும் வாய்க்கப் பெற்றவரான கௌரவ திணேஸ் குணவர்தன அவர்களைப் பாராட்டி, இந்தக் கட்சி தனது பணிகளை மேலும் பலத்துடன் தொடர வேண்டும். இந்த நாட்டில் பல்வேறு பாதிப்புகளுக்கு இன்று முகங்கொடுத்திருக்கின்ற சிங்கள மக்கள் – தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் புதிய விடுதலையினைப் பெற்றுக் கொடுக்கின்ற வகையில் அதன் பணிகள் சிறக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், இன்று இந்த நாட்டில் வறுமை ஒழிப்பு, ஊழல் மோசடிகள் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு என்ற முக்கிய விடயங்களை முழுமூச்சுடன் செயற்படுத்தி வருகின்ற ஜனாதிபதி கௌரவ மைத்திரபால சிறிசேன அவர்கள் இங்கே இருக்கின்றார். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களும் இருக்கின்றார். இந்த இருவருக்கும் இந்த நாட்டின் பெரும்பாலான மக்களிடையே ஆதரவு இருந்து வருகின்ற நிலையில், தமிழ் பேசும் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வு இந்த இருவரும் இணைந்திருக்கின்ற நிலையிலேயே சாத்தியம் என்பதே நடைமுறை ரீதியலான சாத்தியமாக இருக்கின்றது.

அத்தகையதொரு உன்னதமான முயற்சிக்கு மகஜன எக்சத் பெரமுன – மக்கள் ஐக்கிய முன்னணிக்கு இரண்டு சக்கரங்களும் இணைந்து ஓடும் ஒற்றுமையின்  தேர்ப்பாகனாகவும் உழைக்க வேண்டிய பொறுப்பும்  தினேஷ் குணவர்த்தன அவர்களின் முயற்சியிலேயே  தங்கியிள்ளது.  இதை உணர்ந்து அவர் உறுதியுடன் உழைப்பார் என்ற நம்பிக்கை  எனக்கு உண்டு. அதற்கான தனது பங்களிப்பினை வழங்குவார் என்ற எதிர்பார்க்கின்றேன்.

அந்தவகையில் இந்த மாநாடு வெற்றி பெற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாகவும் தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என்றார்.

Related posts:


மக்களுக்கு நன்மையளிக்கும் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது - அமைச்சர் டக்ளஸ் தெரிவி...
அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்ப...
தென்னிலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்றொழில் கிராமங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜய...