சோதனை நடவடிக்கைகள் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, May 8th, 2019

சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களில் சுமார் 130 – 140 பேர் வரையில் நாட்டுக்குள் இருக்கலாம் என்றே அரச தலைவரால் கூறப்பட்டு வருகின்ற போதிலும், அத் தொகையினை மீறிய வகையில் இன்று பலர் கைதாகியிருப்பதாகத் தெரிய வருகின்றது. இன்னும் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இத்தகைய மத அடிப்படைவாதிகள் தொடர்பில் ஏற்கனவே பலமுறை முஸ்லிம் மக்கள் தரப்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவே அம் மக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது. அப்போதே இது தொடர்பில் அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் பல அப்பாவிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கின்றேன்

அப்போது அதனைக் கைவிட்டு விட்டு, தற்போது பல உயிர்கள் பலியானதன் பின்னர், சோதனைகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை நான் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெறுகின்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்படுகின்ற மக்களிடமிருந்து சிறைகளிலுள்ள கைதிகளிலிருந்து, காவலர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரையில் பணம் கோரி நச்சரித்து வருவதாகவும், அவர்களது அச்சுறுத்தல்கள் தாங்காத நிலையில், பலர் பணம் கொடுத்து வருவதாகவும் பலரும் முறையிட்டு வருகின்றனர்.

இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து பார்த்து, அதனை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கையினை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், நாளாந்தம் நடத்தப்பட்டுவருகின்ற சோதனைகளின்போது – தேடுதல்களின்போது கிடைக்கின்ற அனைத்துப் பொருட்கள் தொடர்பான விபரங்களும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்ற நபர்கள் குறித்த விபரங்களும் உடனுக்குடன் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன.

இந்தச் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்ற விதமானது, முஸ்லிம்   சமூகம் தொடர்பில் ஓர் அச்சநிலையினை ஏனைய சமூகங்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுவதாகவும் ஒரு தோற்றப்பாடு தென்படுகின்றது.

மேற்படி தற்கொலைத் தாக்குதல்கள் சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவை என அரச தலைவர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினரும், எதிரணியினரும், பல்வேறு மதத் தலைவர்கள், அரசியல் விமர்சகர்களும் வெளிப்படையாகவே கூறி வருகின்ற நிலையில், இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களில் ஒரு சிறு தரப்பினர் – அதுவும் இந்த நாட்டின் ஏனைய அனைத்து முஸ்லிம் மக்களின் புறக்கணிப்பிற்கு உட்பட்டுள்ள ஒரு சிறு தரப்பினர் அத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்தார்களே அன்றி, இந்நாட்டு அனைத்து முஸ்லிம் மக்களும் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்றே அனைத்து தரப்பின் குரல்களும் எடுத்துக் காட்டி வருகின்றன.

அந்தவகையில், நாடளாவிய ரீதியில் தேடுதல் – சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற நிலையில், அதனை மேலும் மனிதாபிமான முகத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்பதையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:

புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை : ஆராயும் குழுவில் டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும்  நடவடிக்கை களுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போ...
தனியார் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களது நலன்கள் கவனத்தில்; கொள்ளப்பட வேண்டும் - நாடாளும...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும். டக்ளஸ் தேவானந்தா வேண...
தேசிய அரசியல் நீரோட்டத்தை எமது மக்களுக்காக பயன்படுத்துவதில் வெற்றி கண்டவர்கள் நாம் - டக்ளஸ் தேவானந்...
காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர...