கடல்சார் பொருளாதாரம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, January 21st, 2020


இன்றைய தினம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சினால், 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கத்தின் கீழான கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின்  1 முதல் 9 வரையிலான ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகளை இந்தச் சபையிலே சமர்ப்பித்து, அது குறித்து உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டமையிட்டு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்குடன்  உங்களுக்கு ஒரு நாட்டையும்,  நாட்டுக்கு ஒரு எதிர்காலத்தையும் உருவாக்குகின்ற இந்த புதிய ஆட்சி முதன் முதலில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்ற ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகள் என்ற வகையில் இந்த ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகளை மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களது தலைமையிலும், கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களது வழிநடத்தலிலும், எனது அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கௌரவ சனத் நிசாந்த பெரேரா அவர்களது ஆலோசனைகள் மற்றும் அனுசரணையிலும், எமது அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க அவர்களது பங்களிப்பிலும் இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

எமது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும், நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களுக்கும், குறிப்பாக, எமது எதிர்கால சந்ததியினருக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் இந்த ஒழுங்குவிதிகள்  ஆக்கப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டவையாகும்.

கடந்த ஆட்சிக் காலத்தின்போதும்  நான், கடற்றொழில் மற்றும் கடற்றொழிலாளர்கள், நன்னீர் மீன்பிடித் தொழில், அதிலே ஈடுபட்டுள்ள உழைப்பாளர்கள் சம்பந்தமாக கேள்விகளின் ஊடாகவும், உரைகளின் ஊடாகவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை இந்தச் சபையிலே முன்வைத்திருந்தேன்.

அந்தவகையில், இன்று இங்கு சமர்ப்பிக்கப்படுகின்ற ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகளை நானும் துறைசார் அதிகாரிகளுடன் ஆராய்ந்து பார்த்துள்ளேன் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எமது நாட்டில் கடற்றொழில் தொடர்பில் மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் தனது,‘நாட்டைக் கட்டியெழுப்புகின்ற சுபீட்சத்தின் நோக்கு’ என்ற  தேர்தல் விஞ்ஞாபனத்தில் விரிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

 ‘இந்து சமுத்திரத்தில் 5 இலட்சம் சதுர கிலோ மீற்றர் கடல் பிராந்தியத்தில் 1700 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலான கரையோரத்திற்கு உரிமை கோரும் நாம், பாரிய நதிகள், நீர்த் தேக்கங்களுக்கு உரிமை கோரும் நாம், மிக விரைவில் கடற்றொழிலில் தன்னிறைவு காண வேண்டும்’ என மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த மாதம் 03ஆம் திகதி மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையிலும் கடற்றொழில் தொடர்பில் அழுத்தமாகக் கூறியிருந்ததையும் இங்கு நான் மீள நினைவுகூற விரும்புகின்றேன்.

 ‘கடல்சார் பொருளாதாரம் தொடர்பாகவும் இதைவிடக் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ள மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள், கடற்றொழிலை முன்னேற்றுவதற்குத் தேவையான திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தி இருக்கின்றார்.

அந்த வகையில், இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அமைச்சினை என்னிடம் ஒப்படைத்துள்ள மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும், கௌரவ பிரதமர் அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த அமைச்சினை என்னிடம் ஒப்படைத்த மாண்புமிகு ஜனாதிபதி அவர்களதும், கௌரவ பிரதமர் அவர்களதும் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் எனது செயற்பாடுகள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்படும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்

சூழவும் கடலை கொண்டுள்ள நாம் ரின் மீன்களையும், கடலுணவு வகைகளையும் இறக்குமதி செய்வதற்காக பெரும்பாலான அந்நியச் செலாவணியை செலவு செய்து கொண்டிருக்கின்ற நிலைமை மாற்றப்பட வேண்டும்.

இன்று சுமார் 50 ஆயிரம் மில்லியன் ரூபா வரையில் எமது கடலுணவு ஏற்றுமதி காணப்படுகின்ற நிலையில், கடலுணவு சார்ந்த இறக்குமதி செலவீனம் சுமார் 35 ஆயிரம் மில்லியன் ரூபாவாக இருக்கின்றது. எனவே, இறக்குமதி செலவீனங்களை போதியளவில் குறைத்து, ஏற்றுமதி வருமானத்தை கூடுமான வரையில் அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்கேற்ற வகையில் இத்தொழிற்துறையை நவீன தொழில்நுட்பங்களுடன் மேலும் விஸ்தரிக்க வேண்டும்.

எமது மக்களுக்கு நியாயமான விலைகளில் தரமான கடல் உணவு மற்றும் நன்னீர் உயிர்வாழ் உணவு வகைகள் கிடைப்பதற்கும் அதே நேரம், எமது ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் அதி கூடிய பங்களிப்பினை மேற்படி உற்பத்திகளின் மூலமாக ஈட்டிக் கொடுப்பதற்கும் நாம் கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகளை கூடிய விரைவில் வினைத்திறன் மிக்கதாகக் கட்டியெழுப்ப வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் படகுகள் எமது கடல் வளப் பகுதிகளுக்குள் மேற்கொள்கின்ற தொழில் முயற்சிகளை, எமது நீண்ட நாட்கள் படகுகளைக் கொண்டு, அல்லது வெளிநாட்டு நீண்ட நாட்கள் படகுகளை வாடகைக்கு அமர்த்தி எமது கடற்றொழிலாளர்களை –கடற்றொழிலில் ஆர்வமிக்கவர்களைக் கொண்டு நாமே அவற்றை தரமிக்க வகையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

எமது கடற்றொழிலுக்கு உரித்தான வளங்களை தூர நோக்கு அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதும், பேணிப் பாதுகாக்க வேண்டியதுமான தேவை இருக்கின்றது.

அதே நேரம், கடற்றொழில் சார்ந்து வசதிகளை வழங்கக்கூடியதான துறைகளின் உட்கட்டமைப்பு ஏற்பாடுகள் அனைத்தும், நவீன வசதிகளைக் கொண்டதான புதிய தொழில்நுட்பங்களுடன் மறுசீரமைக்கப்பட வேண்டியத் தேவை இருக்கின்றது.

அனைத்து கடற்றொழிலாளர்களின், நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களின் நலன்கள் கருதியும், தற்போதிருக்கின்ற அவர்களது வாழ்வாதாரங்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையிலும், அவர்களது வாழ்வாதாரங்களை மேலும் முன்னேற்றக்கூடிய வகையிலும் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியத் தேவை இருக்கின்றது.

உழைப்பிற்கேற்ற வருமானம் என்ற வகையில் இத்துறைகளை மேலும் வளர்த்தெடுப்பதன் மூலமாக ஆர்வமுள்ள எவரும் இத்தொழிலில் ஈடுபடக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான தேவையும், இத்துறைகள் சார்ந்து மனைப் பொருளாதார தொழில் முயற்சிகளையும், பண்ணைகளையும் பரந்தளவில் ஏற்படுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது.

அத்துடன் இத்துறை சார்ந்த அதிகாரிகளினது, பணியாளர்களது சேவைகளை மென்மேலும் வினைத்திறன் மிக்கதாக மேம்படுத்த வேண்டியத் தேவை இருக்கின்றது.

இத்துறை சார்ந்து செயற்பாட்டில் இருந்து வருகின்ற நிறுவனங்கள் குறித்தும் மிக அதிகமான அவதானங்களை செலுத்த வேண்டி இருக்கின்றது. குறிப்பாக, எமது அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகின்ற தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவர் நிறுவகம் (Nயுசுயு)இ தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு  அபிவிருத்தி அதிகார சபை (Nயுஞனுயு) மற்றும் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்ற நிலையில், அவற்றை மென்மேலும் மேம்படுத்த வேண்டியத் தேவையும், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம், சீனோர் மற்றும் நோர்த் சீ – வடகடல் நிறுவனம் – போன்றவை கடந்த கால செயற்பாடுகள் காரணமாக மிகவும் பின்தங்கிய மட்டத்தில் காணப்படுகின்றன. எனவே, இந்த நிறுவனங்களை விரைவாக இலாபம் ஈட்டக்கூடிய நிறுவனங்களாக கட்டியெழுப்ப வேண்டியத் தேவை இருக்கின்றது. அந்த வகையில் அதற்குரிய நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் இங்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்துடன், கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடித்துறை சார்ந்த அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிகளை எமது இளம் சமதாயத்தினரும் பயன்பெறக்கூடிய வகையில் மேலும் விரிவாகவும், பரவலாகவும் வழங்க வேண்டியத் தேவையும் இருக்கின்றது.

எனவே, இத் தேவைகள் அனைத்தையும் சம காலத்தில் விரைந்து பூர்த்தி செய்து கொள்வதற்காக கடுமையான முயற்சிகளை எமது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அந்த வகையில், அமைச்சு அலுவலகத்தில் மாத்திரம் அமர்ந்து கொண்டு தீர்மானங்களையும், முடிவுகளையும் எடுக்காமல்,  இத்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் நேரடியாகவே சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டும், கடற்றொழிலாளர்கள், நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடியும், அவர்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பெற்று வருகின்றேன்.

இத்தகைய கள விஜயங்கள் கடற்றொழில் மற்றும் றன்னீர் மீன்பிடித் துறைகளை மேலும் வலுமிக்கதாக முன்னேற்றுவதற்கு உறுதுணையான அனுபவங்களை எனக்குக் கொடுத்து வருவதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதுமட்டுமன்றி, இத்தகைய கள விஜயங்கள் இத் தொழிற்துறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும், அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒருவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றது. மாண்புமிகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் உள்ளிட்ட இந்த அரசாங்கம், எமது அமைச்சு இத்துறை சார்ந்து பாரிய மேம்பாடுகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை அவர்களிடையே தோற்றுவிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இந்த மூன்று மாத காலப் பகுதிக்குள் எமது மக்களின் நம்பிக்கைக்கு உரிய வகையிலான கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறை சார்ந்த நிலைபேறு அபிவிருத்திக்கான ஆரம்ப, அடிப்படை ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அடுத்து வருகின்ற காலங்களில் ஏனைய நடைமுறை செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்க உள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!…

எல்லைத் தாண்டியதும்,  அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழிலை நாம் முற்றாக நிறுத்த வேண்டியத் தேவை இருக்கின்றது. இது, இன்றைய சந்ததியினருக்கு மட்டுமல்ல, நாளைய எமது சந்ததியினருக்கான இன்றைய எமது கட்டாயப் பொறுப்பாகும்.

இன்றும்கூட மேற்படி சட்டவிரோத முறையிலான கடற்றொழில் காரணமாக எமது கடல் வளம் அதிகளவில் அழிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் தங்களது செலவுகளுக்கேற்ப அறுவடைகள் கிடைப்பதில்லை என்ற குறைபாட்டினை கடற்றொழிலாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் பாக்கு நீரிணை முதல், மன்னார் வளைகுடா வரையிலான கடற் பகுதியில் கடல் வளங்கள் தொடர்பில் இந்தியாவுடன் இணைந்து ஓர் ஆய்வினை நடத்துவதற்கும் நாம் எண்ணியுள்ளோம்.

இந்தியாவின் ஊநவெசயட ஆயசiநெ குiளாநசநைள சுநளநயசஉh ஐளெவவைரவநஇ இந்திய மத்திய அரசின் கடற்றொழில் திணைக்களம், தமிழ்நாட்டின் கடற்றொழில் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் நீரக வள மூலங்களுக்கான ஆய்வு நிறுவகமான Nயுசுயுஇ கடற்றொழில் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏனைய பல்கலைக்கழகங்கள் என்பன கூட்டு இணைந்து மேற்படி ஆய்வினை முன்னெடுப்பது ஆரோக்கியமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

இந்த ஆய்வின் பின்னர் அதன் பெறுபேறுகளுக்கு அமைவாக பாக்கு நிரிணை முதற்கொண்டு மன்னார் வளைகுடா வரையிலான கடற் பகுதியில் கடற்றொழில் முகாமைத்துவமொன்றை வலுவுள்ளதாக முன்னெடுக்கும் திட்டம் குறித்தும் ஆலோசித்து வருகின்றோம்.

அதேநேரம், தற்போது எமது நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பினை உண்டுபண்ணி வருகின்ற எல்லைமீறிய கடற்றொழில் முயற்சியான இந்திய இழுவலைப் படகுகள் மூலமான பிரச்சினை விரைவில் தீரும் என்ற நம்பிக்கையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

கரையோரங்களை அண்டியதாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற இந்திய – குறிப்பாக தமிழ்நாட்டு இழுவலைப் படகுகள் மூலமான தொழிற் செயற்பாடுகளை மாற்றி, அவற்றை ஆழ்கடல் தொழிலாக முன்னெடுப்பதற்கென இந்திய மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டு அரசுக்கு பாரியளவு நிதியினை வழங்கியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்திய மத்திய அரசின் இந்தச் செயற்பாட்டினை நாம் வரவேற்கின்றோம். அந்த வகையில் எமது மக்கள் சார்பாக இந்திய அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேநேரம், மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு, இந்தியப் பிரதமர் மட்டத்தில் இந்திய கடற்றொழிலாளர்களால் எமது நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடி இருந்தததையும் நான் இங்கு நினைவுகூற விரும்புகின்றேன்.

அத்துடன், கடற்றொழில் சார்ந்த சட்டமூலத்திலும் நாங்கள் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வர வேண்டிய தேவையில் இருக்கின்றோம். குறிப்பாக, பிரதேசத்திற்குப் பிரதேசம் கடல் வளங்களை ஆய்வு செய்து அறிந்து, அதற்கேற்பதான தொழில்சார் ஒழுங்குவிதிகளைக் கொண்டு வர வேண்டியுள்ளது.

கடலோரம் சார்ந்து வாழ்ந்து வருகின்ற மக்கள் தங்களது வாழ்விடங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் ஆபத்தான நிலைமைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்ற நிலையில், இம் மக்களது வாழ்விடங்கள் முதற்கொண்டு, தொழில் வாய்ப்புகள் வரையிலான அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டதான விஞ்ஞானபூர்வமான அறிவியல் சார்ந்த நிலைபேறான அபிவிருத்தியே இன்றைய கடற்றொழிற்துறையின் தேவையாக இருப்பதை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.

மேலும், களப்புகளை மையமாகக் கொண்ட கடலுணவு  மேம்பாடு குறித்தும் நாம் வெகு அவதானத்தைச் செலுத்தி வருகின்றோம். எமது நாட்டைப் பொறுத்த வரையில் சுமார் 1 இலட்சத்து 60 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் களப்பு சார் நீரக வள மூலங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில், அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இறால், கொடுவா மீன், களவாய் மீன், கடலட்டை மற்றும் நண்டு போன்ற பண்ணைகளை மேலும் உருவாக்குவதற்கும்,  அவற்றை விரிவுபடுத்துவதற்கும் இதன் மூலமாக திட்டமிட்டுள்ளோம்.

இதேநேரம், நன்னீர் மீன்பிடித் தொழிற்துறை தொடர்பிலும் எமது விN~ட அவதானங்கள் செலுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இத்துறைக்கென எமது நாட்டில் 3 இலட்சத்திற்கும் அதிகமான சதர கிலோ மீற்றர் நீரக வள மூலங்கள் காணப்படுகின்றன.

அந்தவகையில், தற்போது நீரக வள மூலங்களைக் கொண்ட நீர் நிலைகளை மையப்படுத்தி மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உரியதான தற்போது தூர்ந்து போயுள்ள குளங்கள் மற்றும் நீர் நிலைகளை இனங்கண்டு, அவற்றை மீளப் புனரமைத்து, கமநல சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து நன்னீர் மீன்பிடித்துறையை முன்னெடுப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்தத் திட்டமானது விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு போன்ற மூவித துறைகள் சார்ந்த பயன்களைத் தரக்கூடிய திட்டமாகும். இதன் ஊடாக கிராம மட்டங்களின் பொருளாதாரத் துறையினை மேம்படுத்துவதும், கிராம மக்களின் போ~hக்கு நிலையினை மேம்படுத்துவதும், ஏற்றுமதிப் பொருளாதாரத் துறைக்கு வலு சேர்ப்பதும் எமது எதிர்பார்ப்பாகும்  என்பதையும் இங்கு அறியத் தருகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!…

இன்றைய தினம் இந்தச் சபையிலே சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகள் யாவும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் குறிப்பாக எமது எதிர்கால சந்ததியினரதும் நலன் கருதியே வகுக்கப்பட்டுள்ளன என்பதை நான் மீண்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில், மேற்படி ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகள் தொடர்பில் அவற்றின் பின்னணிகளை மிகச் சுருக்கமாக இங்கு விபரிக்க விரும்புகின்றேன்.

இதன் முதலாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானது எமது நாட்டின் நீர் பரப்புகளுக்குள் நீர் வாழ் உயிரினங்களையும், நீரக வள மூலங்களையும் பாதுகாக்கின்ற ஒழங்கு விதிகளாகும்.

எமது நாட்டிலே காணப்படுகின்ற நீரக வள மூலங்களைக் கொண்ட நிலைகளில் நீர் வாழ் உயிரினங்களுக்கும் அதேநேரம், நீரக வள மூலங்களுக்கும் பாதிப்பினை உண்டு பண்ணக் கூடிய எவ்விதமான கழிவுப் பொருட்களையும் எறிவது – கொட்டுவது இதன் மூலமாகத் தடை செய்யப்படுகின்றது.

அண்மையிலே நான் பல்வேறு பகுதிகளுக்கு மேற்கொண்டிருந்த கள விஜயங்களின்போது நீரக வள மூலப் பகுதிகள் பலவும் கழிவுப் பொருட்களால் மிக அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தததைக் காணக் கூடியதாக இருந்தது. அவற்றை உடனடியாக சுத்தஞ் செய்யுமாறு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பணிப்புரைகளை விடுத்தாலும், அத்தகைய கழிவுப் பொருட்களை நீர் நிலைகளில் எறிகின்றவர்களிடையே – கொட்டுகின்றவர்களிடையே இடையே விழிப்புணர்வு ஏற்படாத வரையில் கழிவுப் பொருட்களின் தாக்கத்திலிருந்து நீர் நிலைகளைப் பாதுகாத்துக் கொள்வதென்பது கடினமான காரியமாகும்.

அந்த வகையில், இதற்கான விழிப்புணர்வு ஏற்பாடுகளை தற்போது நாம் பரவலாக முன்னெடுத்து வருவதுடன், நீரக வள மூலப் பகுதிகளைத் துப்புரவு செய்கின்ற நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளோம்.

அத்துடன், கரையோரங்களில் காணப்படுகின்ற கண்டல் தாவரங்களை ஏதேனும் வகையில் அழிப்பதற்கான தடையினையும் இந்த ஒழுங்குவிதிகள் முன்மொழிவு கொண்டுள்ளது.

தற்போது உலகிலே பல்வேறு தாவர இனங்கள் அழிந்து வருவதாகவும், எமது நாட்டிலும் பல்வேறு தாவரங்கள் அழிவை எதிர்நோக்கி வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்ற நிலையில், அதில் முக்கியமானதாக இந்த கண்டல் தாவரம் காணப்படுகின்றது.

குறிப்பாக மீன் மற்றும் இறால் பெருக்கத்திற்கு, கால்நடை உணவுக்கு, கடற்கரையின் பாதுகாப்பிற்கு, கரிய அமில வாயுவின் அளவை குறைப்பதற்கு, கடல் வளங்களைப் பேணுவதற்கு, கடல் நீரைத் தூய்மையாக்குவதற்கு, கடல் வாழ் அங்கிகளின் வாழ்விடமாக, பசளை உற்பத்திக்கு, பறவைகளுக்கு புகலிடமாக, மண் அரிப்பைத் தடுப்பதற்கு என பல்வேறு நன்மைகளை வழங்குகின்ற கண்டல் தாவரமானது, எமது நாட்டிலே தற்போது சுமார் 8000 ஹெக்டெயர் பரப்பளவில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது அழிவின் விளிம்பை நோக்கிச் செல்வதால், உடனடியாக கண்டல் தாவர இன பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையும், கண்டல் தாவரங்களை வளர்க்கும் தேவையும் அத்தியவசியமாக உள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்பகின்றேன்.

இரண்டாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானது, 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் 28வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய ஒழுங்குவிதியாகும்.

இது ‘ஸ்பியர்’ எனப்படுகின்ற ஈட்டி பொருத்தப்பட்ட அதாவது கூர் முனை கொண்ட துப்பாக்கி கொண்டு, அல்லது கூர்மையான ஆயுதத்தைக் கையில் கொண்டு, கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தடை செய்கின்றது.

53.     இந்த முறைமையானது இன்று உலகின் பல்வேறு நாடுகளிலே தடை செய்யப்பட்டு வருகின்ற முறையாகும். கடல் வளத்தை வெகுவாக அழிக்கின்ற இந்த முறைமையினை சூழலியலாளர்கள், அலங்கார மீன் ஆர்வலர்கள், வனஜீவிகள் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் போன்ற பலரும் எதிர்த்து வருகின்றனர். மேற்படி தொழில் முறைமை காரணமாக அலங்கார மீனினங்கள் அழிவடைந்து வருகின்ற நிலைமை மிக அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்றாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானது, இலங்கையின் உள்ளோ, இலங்கையின் கடல் நீரக வள மூலப் பகுதிகளிலோ ‘தம்புவா’ எனப்படுகின்ற (ஊநிhயடழிhழடளை ளழnநெசயவi) ஒரு வகை விள மீன்களைப் பிடிப்பதானது தடை செய்யப்படுகின்றது.

சுமார் 20 மீற்றர் ஆழ்கடலில் கற்பாறைகளை அண்டியதாக வாழுகின்ற, சூழலுக்கு மிகுந்த நன்மை பயக்கின்ற இந்த அரிய வகை மீனினமும் தற்போது அழிவை நோக்கி வருவதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

12 வருட  ஆயுட் காலத்தைக் கொண்ட இந்த மீனினமானது 5 வருடத்தில் முட்டை இட ஆரம்பிக்கின்றது. எனினும், கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் இந்த வகை மீனினத்தையும் குறை வயதில் பிடித்து வருவதாலும், அழித்து வருவதாலும் இன்று அழிவு நிலை நோக்கியதாக இந்த மீனினம் இருப்பதால், இவற்றின் மூலமான உற்பத்தியான சிகப்பு இறால் எனப்படும் கடல் இறால் இனமும் அழிவுக்கு உட்பட்டே வருகின்றது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நான்காவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானது, தேசிய நுகர்வுத் தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்படுகின்ற மீன் வகைகள் மற்றும் கடலுணவு உற்பத்திகளுக்கு உரியதான 1980ஆம் ஆண்டு 26ஆம் இலக்க உணவு சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்டுள்ள ஏதேனும் கட்டளைகளுக்கு உட்பட்டு, கடற்றொழில் இரையாக பயன்படுத்துவதற்கான உணவு என்ற வகையிலோ, மக்களது நுகர்வுக்காக அல்லது குளிரூட்டப்பட்ட அல்லது குளிரூட்டப்படாத அல்லது ரின்களில் அடைத்த மறைமுக மற்றும் நேரடி நிலை கொண்ட மீனினங்கள் மற்றும் கடலுணவு உற்பத்திகளை இறக்குமதி செய்தல், ஏற்றுமதி செய்தல், மீள் ஏற்றுமதி செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் பதிவு செய்தல் வேண்டும் என்ற ஒழுங்குவிதியினைக் கொண்டுள்ளது.

இது, மேற்படித் துறைகள் சார்ந்த செயற்பாடுகளின்போது, தரத்தைப் பேணுவதற்கும், வினைத்திறன்மிக்க துறைசார் செயற்பாடுகளை தொடர்வதற்கும் அதேநேரம், உள்@ர் கடலுணவு உற்பத்தியாளர்களது சந்தை வாயப்புகளுக்கான நலன் கருதியும் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கௌரவ சபாநாயகர் அவர்களே!….

ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகள் (வர்த்தமானி இல.2027ஃ32) எமது அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு ஒவ்வாத வகையில் காணப்படுவதால் அவற்றை நீக்கிக் கொள்வதற்கு அனுமதி கோருகின்றேன்.

இதன் ஏழாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானது, எமது நாட்டின் சுற்றுலாத் துறையினை மேம்படுத்தும் நோக்கில் 1985ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதியைக் கொண்டதும், 337ஃ48ஆம் இலக்கத்தை உடையதுமான அதி விN~ட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 1984ஆம் ஆண்டின் கரைவலை கடற்றொழில் ஒழுங்குவிதிகள் ‘அ’ அட்டவணையில் ‘காலி மாவட்டம்’ எனும் தலைப்பின் கீழான 23வது வகையினையும், அதனுடன் தொடர்பான குறிப்பினையும் நீக்குவதன் ஊடாக திருத்தஞ் செய்யப்படுகின்றது.

அதாவது, காலி மாவட்டத்தில் சுற்றுலாப் பயண அபிவிருத்தி ஏற்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த கரைவலை தொழிலாளர்கள், சுற்றுலாத்துறை சார்ந்த தரப்பினருடன் ஏற்படுத்திக் கொண்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்ததன் காரணமாக, மேற்படி தொழிலாளர்கள் அதற்கான இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்டதால், இந்த நீக்கத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எட்டாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானது, எமது நாட்டின் தனித்துவமிக்க பொருளாதார வலயத்திற்குள், ஆழ் கடலில் அல்லது வேறொரு நாட்டினது தனித்துவமிக்க பொருளாதார வலயத்திற்குள் ஏதேனும் வெளிநாடொன்றினது கொடியுடன் கூடிய படகுகளில் பணியாற்றுகின்ற எந்தவொரு இலங்கையரும் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் முறையற்ற கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் முறையற்ற கடற்றொழிலில் ஈடுபடுகின்ற ஒரு நபரோ அல்லது படகோ இந்த நாட்டுக் கடற் பரப்பிலோ அல்லது வேறு எந்தவொரு நாட்டினதும் கடற் பரப்புகளிலோ கடற் தொழில் செய்வதைத் தடுப்பதன் ஊடாக சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் முறையற்ற கடற்றொழிலை தடுக்கின்ற செயற்பாட்டுக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே இந்த ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்டுள்ளன.

ஒன்பதாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானதும் மேற்படி சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் முறையற்ற கடற்றொழிலை தடுப்பதற்கான ஒழுங்குவிதிகளைக் கொண்டதாகும். அந்த வகையில் படகின் உரிமையாளர் அல்லது பிரதானி படகின் பதிவு ஆவணங்களை அல்லது ஆவணங்களின் பிரதிகளை, தொழில் அனுமதிப் பத்திரங்களை அல்லது அவற்றின் பிரதிகளை தொழிலில் ஈடுபடுகின்ற படகுகளினுள் வைத்திருக்க வேண்டும் என்பதன் ஊடாக சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் முறையற்ற கடற்றொழிலை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும்,

அதேநேரம், தடைசெய்யப்பட்ட தொழில் முறைமைகளை தடுக்கும் வகையில் மின்பிறப்பாக்கிகளை கொண்டு செல்லாமல், 12 வோட் மின்சார வலுவுக்கு மேற்படாத பற்றரியினை பயன்படுத்துவதை உறுதி செய்வதாகவும் அமையக் கூடியதாகும்.

அந்த வகையில், கடற்றொழிற் துறையை மேலும் அறிவியல் ரீதியாக மேம்படுத்தும் நோக்கிலும், சர்வதேச உடன்படிக்கைகளின் விதிமுறைகளுக்கு அமைவாகவாகவும், கடல் வளத்தையும், கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்களையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலும், இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகளுக்கு உங்கள் அனைவரினதும் ஆதரவு கிட்டும் என எதிர்பார்க்கின்றேன்.

அதேநேரம், எமது நாட்டில் கடற்றொழில் துறையினை  அறிவியல் சார்ந்த, நிலைபேறான துறையாக அபிவிருத்தி செய்வதற்கென மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களும், கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களும் வழங்கிவரும் தலைமைத்துவத்திற்கும், வழிகாட்டல்களுக்கும் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், என்னுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற எனது அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கௌரவ சனத் நிசாந்த பெரேரா அவர்களுக்கும், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க அவர்களுக்கும், மேலதிக செயலாளர்கள் உட்பட அமைச்சு அதிகாரிகளுக்கும், கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு கினிகே பிரசன்ன ஜானக்க குமார உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும், ஏனைய அனைத்து நிறுவனங்களின் பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு,

எமது நாட்டின் கடற்றொழில் துறையை மேம்படுத்தும் பணியில் உங்கள் அனைவரதும் பங்களிப்புகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து விடைபெறுகின்றேன்.

நன்றி.

Related posts: