சட்ட மருத்துவ அதிகாரி இல்லாததால் காத்திருந்து சடலத்தை பெறும் நிலை!

Thursday, April 5th, 2018

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் நிரந்தர சட்ட மருத்துவ அதிகாரி இல்லாததால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பணியாற்றும் சட்ட மருத்துவ அதிகாரியே பதில் கடமையாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பொதுமக்கள் பொறுமைகாத்து உடற்கூற்றுப் பரிசோதனை செய்தபின்னர் இறந்தோரின் உறவினர் சடலங்களைப் பெற்றுச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விபத்துக்கள் உள்ளிட்ட திடீர் இறப்புகள் கட்டாயம் உடற்கூற்றுப் பரிசோதனை செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 60 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களும் தென்மராட்சிக்கு அப்பால் முதன்மைச் சாலை மற்றும் ஏ 32 சாலை போன்றவற்றில் இடம்பெறும் விபத்துக்கள் போன்றவற்றால் உயிரிழப்போரின் சடலங்களும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவமனையில் கடமையாற்றிய சட்ட மருத்துவ அதிகாரி உயர்கல்வி பெற அண்மையில் கொழும்பு சென்றுள்ளார். நிரந்தர சட்ட மருத்துவ அதிகாரி மருத்துவமனைக்கு நியமிக்கப்படும் வரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியின் பணி தேவையாக உள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனை செய்வது மட்டும் மருத்துவமனை நிர்வாகமும் சட்ட மருத்துவ அதிகாரியும் இணைந்து மேற்கொள்வதாகும். பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் உயிரிழந்தாலோ அல்லது மருத்துவமனையில் சேர்க்கும்போது உயிரிழந்தாலோ உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்படல் வேண்டுமென்பது நடைமுறை.

ஒருவர் உயிரிழந்தால் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டியதே மருத்துவமனையின் கடமை. அதன் பின்னர் பொலிஸார் நீதித்துறையினரின் நடவடிக்கையின் பிரகாரம் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டால் மட்டும் உடற்கூற்றுப் பரிசோதனை செய்து சடலத்தை வழங்க வேண்டிய பொறுப்பு சட்ட மருத்துவ அதிகாரிக்கும் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உரியது.

சடலத்தை உடனடியாக வழங்குவதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைக்கவில்லையென குற்றஞ் சாட்டுகின்றனர். நீதிமன்ற நீதிவானின் அல்லது திடீர் இறப்பு விசாரணை அதிகாரியின் பணிப்புரை கிடைத்தபின்னரே உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டுமென்பது மக்கள் அறிந்திருக்க வேண்டிய விடயம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: