உள்ளூர் உற்பத்தியாளர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் சிறந்த எதிர்காலத்தை எட்டமுடியும் – யாழ் வர்த்தக தொழிற்துறை மன்றம் வலியுறுத்து!

Thursday, January 20th, 2022

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 12 ஆவது தடவையாக இம்மாதம் ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் நந்தரூபன், யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை வடக்கில் உள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற தளம் என்றார்.

இந்த கண்காட்சிக்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து எல்ஈசிஎஸ் (LECS) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில் சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன.

அனைத்து பொதுமக்களையும் கண்காட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளதுடன் மேலும் தகவல் விபரங்களுக்கு www.jitf.lk ஐப் பார்வையிடவும் அல்லது 077-1093792 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளவும் என்றனர்.

இதனிடையே

அரசாங்கத்தின் தற்போதைய இறக்குமதிக்கான தடை உள்ளூர் உற்பத்தியாளர்களை வளர்த்துக் கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பத்தை உள்ளூர் உற்பத்தியாளர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் நல்ல எதிர்காலம் உண்டென யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் உப – தலைவர்  குலரத்னம் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2022 ஆம் ஆண்டின் ஏற்பாட்டுக் குழுவினரால் நேற்றையதினம் ஊடக சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாண வர்த்தக சர்வதேச வர்த்தக கண்காட்சியில் வழக்கமாக 40 காட்சிக் கூடங்களையே உள்ளூர் உற்பத்தியாளர்களுக்காக ஒதுக்குவோம்.

நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலை நிமித்தம் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் இம்முறை எம்மிடம் 20 உள்ளூர் உற்பத்தியாளர்களே கோரிக்கையை விடுத்துள்ளனர்.

காட்சிக் கூடங்களை அவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் கணிசமான அளவு காட்சிக்கூடங்களை இலவசமாகவும்  வழங்கப்படுகின்றது.

மாற்று வலுவுள்ளவர்களுக்கும் இயற்கை விவசாயத்திற்கும் முன்னாள் போராளிகளது உற்பத்திகளுக்கும் விசேட சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கின்றது.

அரசாங்கத்தின் தற்போதைய இறக்குமதிக்கான தடை உள்ளூர் உற்பத்தியாளர்களை வளர்த்துக் கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பத்தை உள்ளூர் உற்பத்தியாளர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் நல்ல எதிர்காலம் உண்டு.

வடமாகாணத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஏற்றுமதிக்கான கலாசாரம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

எமது உற்பத்திகளை தேசிய ரீதியில் இருக்கின்ற முக்கியமான சந்தைகளுக்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பது இந்த கண்காட்சி கூடாகவே. இலைமறை காயாக இருந்த எத்தனையோ திறமையான முயற்சியாளர்களை அடையாளப்படுத்தி அவர்களது உற்பத்திக்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது எமது கண்காட்சி என்பதை மறக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: