சர்வதேச ரீதியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!

Tuesday, May 5th, 2020

கொவிட்-19 தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதனடிப்படையில் சர்வதேச ரீதியில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 947 பேர் இதுவரையில் பலியாகியுள்ளனர்.

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் குறைந்து வருகின்றது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பிரான்ஸில் 306 பேரும், ஸ்பெயினில் 164 பேரும், இத்தாலியில் 195 பேரும் இந்த தொற்றால் பலியாகியுள்ளனர்.

கடந்த மாதத்தின் நடுப்பகுதியுடன் ஒப்பிடும் போது இறப்பு விகிதம் குறைந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய அந்த நாடுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 112 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவில் கொரோனா தொற்றுறுதியான 23 ஆயிரத்து 716 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதனடிப்படையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 11 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரையில் ஆயிரத்து 389 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியான 11 ஆயிரத்து 762 பேர் குணமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் 36 லட்சத்து 41 ஆயிரத்து 204 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் 11 லட்சத்து 92 ஆயிரத்து 959 பூரண குணமடைந்துள்ளனர்.

Related posts: