காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்!

Sunday, October 2nd, 2016

காஷ்மீர் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தியது.

காஷ்மீர் மாநிலம் உரி நகர ராணுவ முகாம் மீது கடந்த 18–ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 இதையடுத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு கடந்த புதன்கிழமை நள்ளிரவு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு   காஷ்மீருக்குள்  2 கி.மீ. தூரம் வரை ஊடுருவி 7 பயங்கரவாதிகள் முகாம்களை துவம்சம் செய்தது. இதில் 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தங்களது எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியதை ஜீரணிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இந்திய ராணுவ நிலைகள் மீதும், எல்லையோர இந்திய கிராமங்கள் மீதும் துப்பாக்கி சூடு மற்றும் சிறிய ரக பீரங்கி மூலம் அவ்வப்போது, தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம், எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையோரத்தில் அக்னூர் செக்டார் மற்றும் சாம்ப் பகுதிகளில் உள்ள பல்லான்வாலா, படூ, சானு ஆகிய கிராமங்கள் மீது இடைவிடாமல் கனரக தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.

இதேபோல் சிறிய ரக பீரங்கிகள் மூலமும் இடைவிடாமல் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதை எதிர்பார்த்திருந்த இந்திய ராணுவமும் அதே வகை ஆயுதங்களைக் கொண்டு தக்க பதிலடி கொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே காலை 7.30 வரை இந்த சண்டை நீடித்தது. அதன்பின் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்திக் கொண்டது.

பாகிஸ்தானின் தாக்குதலில் படூ கிராமத்தில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. நல்லவேளையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதிகளில் வசித்து வந்த நூற்றுக்கணக்கானோரை ராணுவத்தினர் நேற்று முன்தினமே இப்பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கும் நிவாரண முகாம்களுக்கும் அனுப்பிவைத்து விட்டனர். இதனால் பாகிஸ்தானின் தாக்குதலில் யாரும் காயம் அடைந்ததாக தகவல் எதுவும் இல்லை.

பாதுகாப்பு மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த கிராம மக்களில் சிலர் தங்களுடைய கால்நடைகளையும், உடமைகளையும் எடுத்து வருவதற்காக மீண்டும் கிராமத்திற்கு திரும்பி வந்தபோது அவர்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது.

கடந்த 4 நாட்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருப்பது இது 5–வது முறையாகும்.இந்த நிலையில் துர்கா பூஜை மற்றும் நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் நேற்று நாடு முழுவதும் தொடங்கின. இதையடுத்து மக்கள் கூடும் இடங்கள், பதற்றமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதாவது கிடந்தால் அதுபற்றி மிகுந்த விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையாகவும் பொதுமக்கள் இருக்கவேண்டும் என்று பாதுகாப்பு முகமைகள் அறிவுறுத்தி உள்ளன.

smoke

Related posts: