வாழ்க்கையை இரத்து செய்வதைக் காட்டிலும் நிகழ்வுகளை இரத்துச் செய்வது சிறந்தது – பொதுமக்களிடம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்து!

Tuesday, December 21st, 2021

பொதுமக்கள் பண்டிகை காலத்தில் தமது விடுமுறை திட்டங்களை கைவிடுமாறு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அத்னொம் கெப்ரியிசஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன்“வாழ்க்கையை இரத்து செய்வதைக் காட்டிலும் நிகழ்வுகளை இரத்துச்செய்வது சிறந்தது” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கடினமான தீர்மானத்தை எடுப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி நிகழ்வுகளை இரத்துச் செய்யமுடியும் அல்லது தாமதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை ஒமிக்ரோன் மாறுபாடு ஆக்கிரமிப்பதாக நிபுணர்கள் வெளியிட்ட கருத்தை அடுத்தே உலக சுகாதார அமைப்பின் தலைவரது எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

ஒமிக்ரோன் தொற்று டெல்டா தொற்றைக் காட்டிலும் வேகமாக பரவி வருவதற்கான சாட்சியங்கள் உள்ளன. கொரோனாத் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள், உலகில் 70 வீதமான மக்களுக்கு 2022 நடுப்பகுதியிலேயே சென்று சேரும். எனவே 2022 இறுதியில் கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவரக்கூடியதாக இருக்கும் என்று டெட்ரோஸ் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை 2019இல் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொடர்வில் சீனா, மேலதிக தகவல்களை வெளியிடவேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: