சட்டவிரோத சிறுநீரக விற்பனை கும்பலின் தலைவர் கைது!

Thursday, June 9th, 2016

சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலின் தலைவராக கருதப்படும் டி ராஜ்குமார் ராவ் என்பவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வறியவர்களிடம் பணத்தாசை காட்டி சிறுநீரகம் பெறப்பட்டு, அவை பெரும் விலைக்கு விற்கப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக, தில்லி அப்பல்லோ மருத்துவமனயின் ஐந்து ஊழியர்கள் உட்பட 8 பேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டனர். இந்த சட்டவிரோத வர்த்தகத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென மருத்துவமனை மறுத்திருக்கிறது. “வெகுவாகத் திட்டமிட்டு நோயாளிகளையும் மருத்துவமனையையும் ஏமாற்றும் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டிருப்பதாக” அந்த மருத்துவமனை கூறியிருக்கிறது.

அந்த மருத்துவமனையில் தற்போது நடந்துவரும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை எப்படி நடக்கிறது என்பதை அறிய, ஒரு குழுவையும் மருத்துவமனை அமைத்திருக்கிறது.

தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் ராஜ்குமார், இதே போன்ற வழக்குகள் தொடர்பாக பல தெற்காசிய நாடுகளில் தேடப்படுவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

செவ்வாய்க்கிழமையன்று சிறுநீரக தானம் செய்த ஒரு தம்பதி உட்பட மூன்று கொடையாளிகளை காவல்துறை கைதுசெய்தது. கடனை அடைப்பதற்காக தாங்கள் சிறுநீரக தானம் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Related posts: