யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடத்துடன் மூடப்படும் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவிப்பு!

Tuesday, April 9th, 2024

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடத்தில் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நடந்த யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களே இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ். மாவட்டத்தில் 3 நலன்புரி நிலையங்கள் இயங்கி வருவதாகவும், அதில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10 ஆகும்.

மேலும், இடம்பெயர்ந்த 1,502 குடும்பங்கள் தற்போது நலன்புரி நிலையங்களில் இல்லாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அதேவேளை, 212 குடும்பங்களுக்கு காணி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அவர்களுக்கு வீடுகளும் வழங்கப்படும்.

அது மாத்திரமன்றி,  காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ( Ranil Wickremesinghe) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படவுள்ளதன் காரணமாக குறித்த நலன்புரி நிலையங்கள் மூடப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: