பசு மாட்டில் பால் கறந்த குடும்பப் பெண்ணை உதைத்தில் பரிதாபகரமாக உயிரிழப்பு

Saturday, May 20th, 2017

பசு மாட்டில் பால் கறந்த சந்தர்ப்பத்தில் குறித்த பசுமாடு எகிறிப் பாய்ந்து உதைத்தில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த குடும்பத்தினர் பசுமாடொன்றைக் கொள்முதல் செய்திருந்தனர். அந்தப் பசு அண்மையில் கன்றொன்றினை ஈன்றிருந்தது.

அந்தப் பசுவில் உயிரிழந்த குடும்பப் பெண்ணே வழமையாகப் பால் கறந்து வருகிறார். வழமையாகப் பசுவின் காலைக் கட்டி விட்டுப் பால் கறந்து வரும் அவர் நேற்று வழமைக்கு மாறாகக் காலைக் கட்டாது பால் கறந்துள்ளார். இதனால் பால் கறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் திமிறிய பசு மாடு தனது பின்னங்கால்களால் குறித்த குடும்பப் பெண்ணில் நெஞ்சிலும், தலையிலும் பலமாக உதைத்தது.

இதனால் மூர்ச்சையுற்றுத் தரையில் விழுந்த குடும்பப் பெண்ணை அவரது பிள்ளைகள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதித்தனர். எனினும், குறித்த பெண்மணியின் உடலைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மானிப்பாய் பொன்னாலை வீதியைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயாரான ரவி விக்கினேஸ்வரி(வயது- 46) என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்

Related posts: