மின்தடைக்கு நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய குறைபாடே காரணம்!

Wednesday, August 24th, 2016

சில மாதங்களுக்கு முன்னர் நாடு பூராகவும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டமைக்கு நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் குறைபாடுதான் காரணமாக அமைந்துள்ளதாக கோப் (COPE) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் –

கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மூன்று சந்தர்ப்பங்களில் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி இரவு 11.53 அளவில் முதலாவது மின் தடை ஏற்பட்டதுடன், 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி பிற்பகல் 2.04 அளவில் மீண்டும் நாடு பூராகவும் மின் விநியோகம் தடைப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி பிற்பகல் 2.20 அளவில் மூன்றாவது முறையாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டது. உரிய முறையில் மின்பிறப்பாக்கி பராமரிக்கப்படாதமையே இந்த மின் தடைக்கு பிரதான காரணம் என கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயந்திரங்களைப் பராமரிப்பதிலும் குறைபாடுகள் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக ஆலோசனை பெறப்பட்ட ஜப்பான் நிறுவனம் மற்றும் அந்த ஆலோசனைகளின் உண்மைத்தன்மை தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின் தடைக்கு நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் குறைபாடுகளே காரணமாக அமைந்துள்ளன. சீன நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு விநியோகஸ்தர் ஒருவர் சீனாவினால் தெரிவு செய்யப்பட்டதாகவும், முதற்கட்டம் குறைந்தபட்ச சோதனையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளும் அவ்வாறே முன்னெடுக்கப்பட்டதாகவும் கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்டத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்க வேண்டிய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மின் தடை ஏற்பட்டமைக்கான காரணத்தை ஆராய்ந்த போது, நாட்டிலுள்ள அனைத்து மின்பிறப்பாக்கிகளும் உபயோகத்திற்கு எடுக்கப்பட்ட திகதி, பாரமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய திகதி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட திகதி ஆகியன உள்ளடங்கிய அறிக்கையொன்றையும் கோப் குழு கோரியிருந்தது. எதிர்காலத்தில் இவற்றைப் பராமரிக்கும் முறை தொடர்பான உரிய அட்டவணையொன்றைத் தயாரித்து முன்வைக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

Related posts: