இலங்கையில் நேற்றையதினமும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரத்து பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, October 27th, 2020

இலங்கையில் நேற்றையதினம் மட்டும் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் இருந்து 499 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 42 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, மினுவாங்கொடை – பேலியகொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 939 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 413 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 464 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் மேலும் 130 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 527 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நாட்டில் இதுவரையில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 836 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அதிக கொரோனா பாதிப்புகளை எதிர்கொண்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 116ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: