கூட்டமைப்பினரே வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை நிறுத்தியுள்ளது – அமைச்சர் சுவாமிநாதன்!

Tuesday, November 22nd, 2016

வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட பொருத்து வீடுகள், உப்பளம், இரணைமடு குடிநீர்த் திட்டம், பொருளாதார மத்திய நிலையம் எனப் பல திட்டங்களை கூட்டமைப்பு நிறுத்தியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். நல்லூர் பகுதியில் சமய நிகழ்வு ஒன்றில் நேற்று(21) கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் மீள்குடியேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுத் திட்டங்கள் தொடர்பாகவும் பௌத்தர்கள் வாழாத பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின் போது பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

வடக்கில் 1 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகள் தேவையாக உள்ளது. நாங்கள் 2.1 மில்லியன் ரூபாய் செலவில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்திருந்தோம்.

அதனை எதிர்த்தார்கள். 2.1 மில்லியன் ரூபாய் பணத்தில் 3 வீடுகளை அமைக்கலாம் என்றார்கள். பின்னர் நாங்கள் 6 லட்சம் ரூபாய் குறைத்து தளபாடங்கள் இல்லாமல் 65 ஆயிரம் வீடுகளை அல்ல 22 ஆயிரம் வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுத்தோம். அதனையும் எதிர்த்தார்கள். ஆயிரம் வீடுகள் தேவை என மக்கள் விண்ணப்பம் கோரியிருக்கின்றார்கள். எனவே நான் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளையா? மக்களின் கோரிக்கையையா? பார்ப்பது என குழம்பியுள்ளேன்.

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கே மக்கள் மழை வெள்ளத்திற்குள் இருக்கின்றார்கள். இது சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமை. இப்போது தமிழ் கட்சிகள் இணைந்து கட்ட உள்ளதாக அறிகிறேன். மக்களுக்கு கிடைத்தால் சரி. ஆனால் எப்போது கட்டுவார்கள். 2018ஆம் ஆண்டு கட்டுவார்கள். பின்னர் சொல்வார்கள் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒன்றையுமே செய்யவில்லையென்று.

எம்மை பொறுத்தமட்டில் மக்களுக்கு கிடைப்பதாக இருந்தால் தமிழரசுக் கட்சி செய்தால் என்ன? அரசாங்கம் செய்தால் என்ன? என் மீது நம்பிக்கை இல்லையென சிலர் நாடாளுமன்றத்திலேயே சொல்கிறார்கள். நான் என்ன தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தேனா? இவர்களுக்கு தமிழ் மக்களின் காயங்களை ஆற வைக்கும் எண்ணமே இல்லை.

யாழ் வலிகாமம் வடக்கு-காங்கேசன்துறை பகுதியில் அமைக்கப்படும் விகாரைகள் என்ன தருணத்தில் அமைக்கப்படுகின்றன என்பது எமக்கு தெரியவில்லை. உண்மையில் கௌதம புத்தர் அடிப்படையில் இந்து சமயத்தை சார்ந்தவர். அந்த வகையில் விகாரை அமைப்பதனால் எமக்கு என்ன பாதகம்? பாதகம் எவையும் இல்லையென்றால் நாங்கள் அதனை பற்றி அதிகம் கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

குறிப்பாக கதிர்காமத்தில் இந்து மதம், பௌத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் மதம் ஆகிய மதங்கள் சார்ந்த ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே பிரச்சினைகள் எவையும் இல்லை. எனவே மற்றைய மதங்களுக்கு பாதகம் உண்டாக்கும் வகையில் விகாரைகள் அமைக்கப்பட்டால் அதனை தடுக்கலாம்.

இதே போல் தமிழர் பகுதியில் அமைக்கப்படும் விகாரைகளுக்கு வரும் பிக்குமார்கள் தமக்குள்ள எல்லைகளை மீறி செயற்பட்டால் அதனை தடுக்கலாம். அதற்கு வழிமுறைகள் இருக்கின்றன எனக் கூறினார்.

swaminathan-01

Related posts: