கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை – கடற்படையின் ஊடகப் பேச்சாளர்!

Sunday, August 25th, 2019

இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து பயங்கரவாதிகள் நாட்டிற்குள் வருவதனையும், வெளியே தப்பித்துச் செல்வதனையும் தடுக்கும் வகையில் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை கடற்படை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில்,

பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆறு உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து, தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால், தமிழகத்தின் கோவை உட்பட பல மாவட்டங்களில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு வாய்ப்புக்கள் இல்லை.

ஏனெனில் கடலோரத்தின் பாதுகாப்பு முன்னரை விட குண்டுத் தாக்குதலின் பின்னர் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்படையினர் எந்த நேரத்திலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, இவ்வாறானதொரு நிலையில் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்வதற்கு எந்த வாய்ப்புக்களும் இல்லை. பயங்கரவாதிகள் இந்தியாவினுள் நுழைந்துள்ளமை தொடர்பாக எத்தகைய உத்தியோகப்பூர்வ தகவலும் எமது உளவுத் துறையினருக்குக் கிடைக்கப் பெற்றதாகத் தெரியவில்லை.

இதேவேளை, புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய இவ்வாறாக இலங்கையிலிருந்து பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளமை தொடர்பான தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சிறுகண் வலை மீன்பிடியால் சிறிய வகை மீன்கள் நாசம் - தடுத்து நிறுத்துமாறு மீனவர் சங்கங்கள் கோரிக்கை!
மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள வடக்கின் 4 வைத்தியசாலைகள் உள்ளிட்ட 9 வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின...
என்மீது நம்பிக்கை வையுங்கள் - நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதே எமது நோக்கம் –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ...