பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாக்கும் வலையமைப்பு அவசியம் – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Monday, August 29th, 2022

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியுடன் இலங்கை தனது பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் போது, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதற்கான வலையமைப்பின் அவசியத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை பிரதமர் சந்தித்தார்.

நாடு எதிர்கொள்ளும் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார சவால்களை எதிர்கொள்ளவும், குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் எதிர்கொள்ளும் இன்னல்களைத் தணிக்கவும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கு பிரதமர் விளக்கினார்.

அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் குறைப்பதற்கும், ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விரிவாகக் எடுத்துரைத்த அவர், சமூகத்தின் வறிய பிரிவினருக்கான நலன்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தமது தூதுக்குழு, அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்துரையாடி சர்வதேச நாணய நிதியத்து அறிக்கை அளிக்கும் என்று ப்ரூவர் கூறினார்.

பிரதமரிடம் சுட்டிக்காட்டியபடி, கடனை மறுசீரமைக்கவும் பொருளாதாரத்தை புத்துயிர் பெறவும் திட்டங்கள் வகுக்கும் போது, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான பாதுகாப்பு ஒரு இன்றியமையாத தேவையாகும் என இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவின் பிரதி தலைவர் மசாஹிரோ நொசாக்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: