பேருந்துகளுக்கான தண்டப்பணம் 5 இலட்சம் வரை உயரும் – அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை!

Wednesday, July 12th, 2023

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய ஆகிய மாகாணங்களில் பெருந்தொகையான பேருந்துகள் அனுமதிப் பத்திரங்களின்றி போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இவ்வாறான குற்றங்களுக்கு விதிக்கப்படும் 10,000 ரூபா தண்டப் பணத்தை 5 இலட்சம் ரூபா வரையில் அதிகரித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தை திருத்துவதற்கு யோசனை முன்வைத்து சட்டமா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அராசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் –

மன்னம்பிட்டிய பேருந்து விபத்து தொடர்பில் எங்களின் கவலையை தெரிவித்துக்கொள்கிறோம். சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிக்கைகமைய, இந்த பேருந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் அனுமதிப் பத்திரத்தை பெற்றிருக்கவில்லை என்பதும் கிழக்கு மாகாண சபையினால் 2008 ஆம் ஆண்டு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதிப் பத்திரத்தின் உரிமையாளர் இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு 10,000 ரூபா தண்டப் பணத்தையும் செலுத்தியுள்ளார். அதன்பின்னரே தற்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதுபோன்ற விபத்துச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகம் பதிவாகுவதால், இவ்வாறான குற்றங்களுக்கு விதிக்கப்படும் 10,000 ரூபா தண்டப் பணத்தை 5 இலட்சம் ரூபாவரையில் அதிகரித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தை திருத்துதல் உள்ளிட்ட மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு யோசனைகளை முன்வைத்து சட்டமா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளேன்.

முச்சக்கரவண்டி, பாடசாலை வான், அலுவலக வாகனங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகளை மேற்கொள்வதற்கான அதிகாரத்தையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபருக்கு யோசனை முன்வைத்துள்ளேன்.

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய ஆகிய மாகாணங்களில் பெருந்தொகையான பேருந்துகள் அனுமதிப் பத்திரங்களின்றி போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.

இரகசிய பொலிஸார், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் அந்தப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் வழங்கும் தகவல்களுக்கமைய பேருந்துகளில் பயணிக்கும்போதே சம்பந்தப்பட்ட இடங்களில் பணத்தை வீசிச் செல்லும் சந்தர்ப்பங்களும் இருப்பதாக தெரிவிக் கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கிலிருந்து வரும் பேருந்துகள் பணத்தை வீசிவிட்டு செல்வதாக பல்வேறு முறைப்பாடுகள் காணப்படுகின்றன.

இதுதொடர்பில் அமைச்சரவைக்கும் அறிவித் திருக்கிறேன். இவ்வாறான முறையற்ற செயற் பாடுகள் சகலதையும் ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டத்தை உருவாக்குமாறு அமைச்சரவைக் யோசனை முன்வைத்துள்ளேன்.

முறையற்ற தற்காலிக அனுமதிப் பத்திரங்களை கொண்டவர்களுக்கு 30,000 ரூபாவி லிருந்து 30 இலட்சம் ரூபா வரையில் தண்ட பணம் விதிப்பதற்கான அமைச்சரவை பத்திரமொன்றையும் சமர்ப்பித்துள்ளேன்.

ஆனால் அதனை அமைச்சரவை அனுமதிக்கவில்லை. பல்வேறு யோசனைகளை முன்வைத்தார்கள். அதன் பிரகாரம் புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: