அரசியல் நோக்கங்களை கொண்டு முன்வைக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுக்கள் எரிபொருள் கொள்வனவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர குற்றச்சாட்டு!

Thursday, July 7th, 2022

அதிக விலை மனுகோரலுக்கமையவே எதிர்வரும் 13 ஆம் திகதி எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது என தெரிவித்துள்ள வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுக்கள் எரிபொருள் கொள்வனவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்..

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றம் புதன்கிழமை (6) கூடிய போது நாட்டில் தீவிரமடைந்துள்ள எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத், ஏன் அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்கின்றீர்கள் என கேட்ட  கேள்விக்குப்  பதிலளிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் –

2022ஆம் ஆண்டுமுதல் காலாண்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை பெற்றோலியக்  கூட்டுத்தாபனம் முறையான கொள்கை திட்டத்தை வகுத்துள்ள போதும், அவற்றை செயற்படுத்துவதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினைக்கு வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு பிரதான காரணியாக உள்ளதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

பாரம்பரிய எரிபொருள் விநியோகத்தர்களுக்கு செலுத்த வேண்டிய கட்டண நிலுவை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளினால் வெளியிடப்படும் கடன் பற்று பத்திரம் தொடர்பில் மாறுப்பட்ட சிக்கல் தன்மை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோக கட்டமைப்பை வழமை நிலைக்கு முன்னெடுக்க எதிர்பார்த்தோம். இருப்பினும் எரிபொருள் கொள்வனவு போட்டித் தன்மையினால்  கொள்வனவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையும் என்பது மாத்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10 மற்றும் 15ஆம் திகதிகளுக்குள் எரிபொருள் கப்பலை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தபோதும், கப்பல் நாட்டை வந்தடையும் திகதி உறுதிப்படுத்தப்படாத காரணத்தினால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த  சாதகமான தீர்மானத்தை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எதிர்வரும் 13ஆம் திகதி  எரிபொருள் கப்பல் ஒன்றை நாட்டுக்கு வரைவழைக்க அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்கு முன்னிலையாகியுள்ள நிறுவனம்  அதிக விலைமனுகோரலை வலியுறுத்தியுள்ளது.

குறைந்த விலைக்கு நிறுவனங்கள்  எரிபொருளை விநியோகிக்க முன்வராத நிலையில் அவசர நிலையினை கருத்திற்கொண்டு அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய  நேரிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: