நெருக்கடியான தருணங்களில் எல்லாம் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Friday, January 7th, 2022

இலங்கைக்கு நெருக்கடியான தருணங்களில் இந்தியா தொடர்ந்தும் உதவும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசுடனான தொலைபேசி உரையாடலின் பின்னர் அவர் டுவிட்டர் பக்கத்திலேயே இதனை பதிவிட்டுள்ளார்.

மேலும் புதுவருடத்தன்று ஜிஎல்பீரிசிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன், நம்பகதன்மை மிக்க நண்பன் என்ற அடிப்படையில் இந்தியா நெருக்கடியான தருணங்களில் இலங்கைக்கு உதவி வழங்கும் என அவர்தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை கடினமான தருணங்களை கடந்து வருவதற்கு உதவிவழங்க தயார் என உறுதியளித்துள்ள இந்தியா திருகோணாமலை எண்ணெய் குத திட்டம் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியா கடன் வழங்குவதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியவேளை இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் அரின்டம் பக்ச்சி இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா எப்போதும் இலங்கை மக்களிற்கு துணையாகயிருந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர் விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரின்டம் பக்ச்சி இலங்கை அதிகாரிகளால் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களில் எஞ்சியிருப்பவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

68 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடித்துதுறை தொடர்பான கூட்டு செயற்குழுவின் கூட்டத்தை முன்கூட்டியே நடத்துவது குறித்து இரு தரப்பும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்ற தகவல்களை நாங்கள் பார்த்துள்ளோம் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளில் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமான விடயம் என தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கையுடன் இணைந்து நவீனமயப்படுத்துவது திட்டம் குறித்து இலங்கையுடன் ஆராய்ந்துவருகின்றோம், இது எரிபொருள்களை சேமிக்க உதவும் இருதரப்பின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும்எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கடன்களை மேலும் நீடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இலங்கை நிதியமைச்சரின் இந்திய விஜயம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் நிதியமைச்சர் தனது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து இந்திய தரப்பிற்கு தெளிவுபடுத்தினார், இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தனது அரசாங்கத்தின் அணுகுமுறைகள் குறித்தும் தெரிவித்தார் என இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கும் இலங்கைக்கும் ஆதரவாக இந்தியா எப்போதும் செயற்பட்டுள்ளது- எங்களின் அயல்நாடுகளிற்கு முதலிடம் குறித்த கொள்கையில் இது முக்கியமான விடயம் என அவர்தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவின் விஜயத்தின் போது உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்குவது குறித்து ஆராய்ப்பட்டது.இலங்கை செலுத்தவேண்டிய கடன்கள் இலங்கையில் இந்திய முதலீடுகள் குறித்தும் ஆராயப்பட்டது மேலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என தெரியவந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: