பல ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்கள் பதுக்கிவைப்பு – 52 நெல் களஞ்சியசாலைகள், 3 சீனி களஞ்சியசாலைகளுக்கு சீல் – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021

வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பதிவு செய்யப்படாத 52 நெல் களஞ்சியசாலைகளில், சுமார் 8 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த களஞ்சியசாலைகள் கடந்த வாரத்தில், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த இரண்டு நாட்களுக்குள் கம்பஹா மற்றும் சீதுவ பிரதேசங்களில் உள்ள மூன்று சீனி களஞ்சியசாலைகளில் ஏறத்தாள 5 ஆயிரத்து 400 மெட்ரிக் டொன் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த களஞ்சிய சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் சீல் வைக்கப்பட்ட களஞ்சியசாலை உரிமையாளர்களுக்கு எதிராக, இந்த வாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, தேவையான நடவடிக்கைகளை சட்டமா அதிபருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதேநேரம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின்படி, பதிவு செய்யப்படாத களஞ்சியசாலை உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாமுதல் 10 ஆயிரம் ரூபா வரை அபராதமும், நிறுவனத்துக்கு 10 ஆயிரம் ரூபாமுதல் பத்து இலட்சம் ரூபா வரை அபராதம், அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: