துப்பாக்கி சூட்டினால்தான் மாணவன் உயிரிழந்தார் – நீதிபதி அறிக்கை!

Friday, November 4th, 2016

குளப்பிட்டிப் பகுதியில் கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்ஷன் ஆகியோரின் வழக்கு விசாரணை இன்று (04) யாழ். நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ். சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, பொலிஸார் மேற்கொண்ட சுட்டுச் சம்பவத்தின்போது, மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த சுலக்‌ஷன் மரணமடைந்ததாகவும் அதன் பின்னர் ஏற்பட்ட விபத்தின் போது, நடராஜா கஜனின் மரணம் ஏற்பட்டதென்றும் தீர்ப்பளிக்கின்றேன் என  நீதிபதி அறிக்கை வாசித்தார்.அதன்பின்னர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், யாழ்.தடயவியல் பொலிஸாரும் சம்பவத்தின் பின்னர் மீட்கப்பட்ட தடயங்களை மன்றில் சமர்ப்பித்தனர்.

அதில் சீ.சி.ரி. காணொளி தவிர்ந்த ஏனைய தடயங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. சம்பவம் நடைபெற்ற போது சம்பவத்தினை நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாகவும், அவர்களின் வாக்குமூலத்தை பாதுகாப்பு மற்றும் பயம் காரணமாக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய முடியாதிருப்பதாகவும், நேரில் கண்ட சாட்சியங்களுக்கு ஏற்படும் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக சாட்சியாளர்களை இரகசியமான முறையில் நீதிமன்றில் சாட்சியம் அளிக்க அனுமதி வழங்க வேண்டுமென சட்டத்தரணிகள்  வேண்டுகோள் விடுத்தனர்.

அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிபதி நேரில் கண்ட சாட்சியங்களை பாதுகாப்பான முறையில் நீதிமன்றில் சாட்சியமளிக்க அனுமதியளித்ததுடன், 5 பொலிஸாரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் இருவரின் பெற்றோர்கள் மன்றில் ஆஜராகியிருந்ததுடன், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் 6 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.வழக்கு நடவடிக்கையின் போது, யாழ். நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Kajan

Related posts: