கனவு நிறைவேறியிருந்தால் தலைவிதியையே மாற்றி எழுதியிருப்போம் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Thursday, March 2nd, 2017

அரசியல் பலம் எமது கைகளில் கிடைத்து எமது கனவு நிறைவேறியிருந்தால் தமிழ் பேசும் மக்களின் தலைவிதியையே நாம் மாற்றி எழுதியிருப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு தேவா கலாசார மண்டபத்தில் நடந்த மக்கள் சந்திப்பின்போது கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் மக்கள் எமக்கு வழங்கிய அரசியல் பலத்திற்கு ஏற்றவாறே நாம் மக்களுக்கு பணியாற்றமுடிந்தது. எம்மிடம் போதிய அரசியல் பலம் இருந்திருக்கவில்லை.  மக்களின் உரிமைகள் குறித்த அக்கறையோ எதையும் ஆற்றவேண்டும் என்ற ஆற்றலோ இல்லாதவர்களுக்கே மக்கள் அதிகாரங்களை வழங்கிவந்திருக்கின்றார்கள்.

அதிகாரங்களைப் பெற்றவர்கள் பேரம்பேச முடிந்த அரசியல் பலத்தோடு இன்றும் உள்ளார்கள். ஆனாலும் அந்த அரசியல் பலத்தை எமது மக்களுக்காக எக்காலத்திலும் பயன்படுத்தியது கிடையாது.

மாறாக அவர்கள் பெற்ற அரசியல் பலம் எமக்குக் கிடைத்திருந்தால் உங்கள் தலைவிதியையே நாங்கள் மாற்றி எழுதியிருப்போம். மாகாண சபை எமது கனவுகளில் ஒன்று என்று எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி கூறிவந்திருக்கின்றார்.

ஏனெனில் நாம் வகித்த  அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியோடு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுவரும் நிதியை ஒப்பிட்டுப்பார்த்தால் அது பலமடங்கு அதிகமாகும். மாகாணசபை எமது கைகளுக்கு கிடைத்திருந்தால் அந்தப் பெருநிதியைவைத்து  உங்கள் வாழ்விடங்களை இன்னும் வளமிகு பூமியாக மாற்றியிருப்போம்.

இன்று என்ன நடக்கிறது? மாகாணசபைக்கு ஒதுக்கப்படும் நிதிகளில் பெரும் பகுதி திறைசேரிக்கு திரும்பிச் செல்கின்றது. இதற்கு யார் காரணம்? இதை இன்று மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள்.

கடலால் பிரிக்கப்பட்டு கவனிப்பாரற்றுக்கிடந்த இந்தத் தீவை எட்டிப் பார்த்தவர் யார்? நினைத்துப் பார்த்தவர் யார்?

இங்கே ஓடுகின்ற தண்ணீர்கூட எங்கள் இரத்தமும் வியர்வையும்தான். இன்னமும் அந்த நன்றியுணர்வோடு நீங்கள் இருப்பதையிட்டு எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அகம் மகிழ்ந்து உங்களை வாழ்த்துகின்றார்.

தொடர்ந்தும் உறுதியுடன் இருங்கள். கனவுகள் நிறைவேறும் காலம் ஒருநாள் கைகூடும் என்றும் அவர் தெரிவித்தார்

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், மாவட்ட யாழ்மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் முரளி ஆகியோர்  கலந்துகொண்டனர்.

16997762_624127997786064_6999971951518780454_n

Related posts: