உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம்முதல் விநியோகிக்க நடவடிக்கை – இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள் சங்கம் தகவல்!

Saturday, July 22nd, 2023

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, தயாரிக்கப்படும் புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம் முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகத் திணைக்களம் மற்றும் மரண பரிசோதகர்கள் சங்கம் ஆகியன இணைந்து இந்தப் புதிய இறப்புச் சான்றிதழை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

12 பிரதான விடயங்கள், 24 உப விடயங்களை உள்ளடக்கியதாக இந்த இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம், இயற்கை மரணமா இல்லையா என்பனவே இதுவரை வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதிய இறப்புச் சான்றிதழில், உயிரிழந்த நபர் தொடர்பிலும் மரணத்திற்கான காரணம் தொடர்பிலும் குறிப்பிட வேண்டும் என்பதுடன், மரண விசாரணை அதிகாரிகளால் இறப்புச் சான்றிதழ்களில் பதிவிடப்படவும் வேண்டும்.

மரணத்திற்கான காரணத்தை நான்கு விடயங்களின் கீழ் விரிவாகக் குறிப்பிட வேண்டும் எனவும், உயிரிழப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இருந்து இடம்பெறும் அனைத்து மரணப் பரிசோதனைகளையும் புதிய இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: