இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது – இராணுவ தளபதி சவேந்திர சில்வா!

Saturday, November 14th, 2020

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 468 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இவ்வாறு தொற்றுறுதியான அனைவரும் ஏற்கனவே கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் திவுலுபிட்டிய மற்றும் பேலியகொடை இரட்டைக் கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 5 ஆயிரத்து 107 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 5 மரணங்கள் நேற்று பதிவாகின. இதன்படி, கொவிட் – 19 தொற்றினால் நாட்டில் உயிரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதென அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொவிட்-19 தொற்றுறுதியான 378 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நேற்றைய நாளின் நிலவரப்படி இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 101 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சர்வதேச நாடுகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியே 37 இலட்சத்து 19 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 30 இலடசத்து 453 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் 3 கோடியே 74 இலட்சத்து 89 ஆயிரத்து 363 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: