இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம்- ஜனாதிபதி

Saturday, April 9th, 2016

நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் எதிர்காலத்தில் நாட்டை பிரிப்பதற்கான கிளர்ச்சிகள் மீண்டும் தலைதூக்கும் என்பதால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற 1956 எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகாவின் மக்கள் புரட்சி சுதந்திர வெற்றியின் 60ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிடுகையில்-

பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்த ஆகியவற்றின் மூலம் அன்று இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் எதிர்ப்புகள் காரணமாக அந்த உடன்படிக்கையை தீவைத்து எரிக்கும் நிலைமை அன்று பண்டாரநாயகாவுக்கு ஏற்பட்டது.

ஆனால் அன்று உண்மையில் இதனை எதிர்த்தவர்கள் உடன்படிக்கையின் சாதகம், பாதகம் தொடர்பான பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது அது கிழித்து எரியப்பட்டதனால் இன்றும் இனப்பிரச்சினை தீராமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மேலும் ஜே.ஆர். ஜெயவர்தன 13ஆவது திருத்தத்தை கொண்டுவந்தார். இந்திய – ஸ்ரீலங்கா உடன்படிக்கையை செய்து கொண்டார். சந்திரிகா பண்டாரநாயக தீர்வுப் பொதியை கொண்டுவந்தார். அதுவும் தீ வைத்து எரிக்கப்பட்டது. எனவே 1956இல் இருந்த பிரச்சினை இன்னும் தொடர்ந்தவண்ணமே உள்ளது.

எனவே இந்த யுகத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் நாட்டை பிரிக்க, தனி ஈழம் கேட்க ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் தலைதூக்கும். எனவே இதற்கு இடமளிக்கக்கூடாது. அனைவரும் இணைந்து இதற்கு தீர்வுகாண வேண்டும்.

பண்டாரநாயகாவை பயங்கரவாதிகளோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களோ கொலை செய்யவில்லை. மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களே கொலை செய்தனர் – என்றார்.

இந்த நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டமை விசேட அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் சேவையில் மூழ்கியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி ம...
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம் - அடுத்த ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முன்வைப்பு!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள் அனைத்துக்கும் ஒக்டோபர் 11 ஆம் திகதி நள்ளிர...