அடிப்படைவாத செயற்பாடுகளுக்காக சரணடைவோருக்கு புனர்வாழ்வு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Sunday, March 14th, 2021

அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பொலிஸ் அதிகாரியல்லாத எவரேனும் ஒருவரிடம் சரணடையும் ஒருவர் 24 மணித்தியாலங்களுக்குள் அண்மையிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணை நடத்துவதற்காக சட்டமூலத்தில் 9 ஆவது சரத்தின் பிரகாரம் சம்பந்தப்பட்ட நபரை தடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமா என்பதை பரிசீலிப்பதற்காக அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சம்பந்தப்பட்ட நபர் குற்றமிழைத்துள்ளமை உறுதியாகும் பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவர் சட்டமா அதிபரிடம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் குற்றத்தின் தன்மைக்கு அமைவாக, அந்த நபருக்கு எதிராக வழக்கு தொடராமல் மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிப்பதற்கு தகுதியுடையவரென்பதே சட்டமா அதிபரின் நிலைப்பாடாக இருந்தாலும் அவர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அதன்போது விடயங்களை ஆராய்ந்து ஓராண்டுக்கு மேற்படாத காலத்திற்கு புனர்வாழ்வளிக்க உத்தரவிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது;

அத்துடன் புன்வாழ்வளிக்கப்படும் காலம் முடிந்த பின்பு அதன் பெறுபேற்றை பரிசீலித்து விடுதலை செய்யவோ அல்லது மேலதிகமாக புனர்வாழ்வளிக்கவோ அல்லது பரிசீலித்துப் பார்க்கவோ வேண்டும் என்பதோடு, அதற்காக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அமைச்சின் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நீடிக்கப்படும் புனர்வாழ்வு கால எல்லையின் முடிவில் குறித்த நபர் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: