மார்ச் மாதம் வரை மழை இல்லை: மூன்று மாதங்களுக்கே குடிநீரை விநியோகிக்க முடியும் – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை!

Sunday, January 15th, 2017

நாட்டின் பல மாவட்டங்களில் மார்ச் மாதம் வரை மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டவிலயல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குழாய் நீரை விநியோகிக்க மூன்று மாதங்களுக்கு போதுமான நீரே தற்போது காணப்படுவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாட்டில் தொடரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

50 அல்லது 60 வீதமான நிலத்தில் விவசாயம் செய்யுமாறு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய போதிலும், 75 வீதமான நிலப் பரப்பில் விவசாயம் செய்யப்படடுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 24 வீதமான சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விளைச்சல் அழிவடையும் நிலையை எதிர்கொண்டுள்ளதுடன், 76 வீதமான விளைச்சலினை பாதுகாக்க முடியும் என நீர்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பருவகாலத்தில் 8000 ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படும் நாச்சாதுவ பிரதேசத்தில் இம்முறை 3000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, பயிர்செய்கையை மட்டுப்படுத்துமாறு தமக்கு அதிகாரிகள் அறிவிக்கவில்லை என பலாங்கொட விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனிடையெ குடிநீர் இன்றி பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கண்டி, பொலன்னறுவை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

தெதுரு ஓயாவின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையினால் குருநாகல் நகருக்கான நீர் விநியோகம் 12 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன் நகருக்கு நீர் விநியோகிக்கும் சிங்கமலை மற்றும் இன்மோரி நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறவைடைந்துள்ளமையால் ஹட்டன் நகருக்கான நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக ஹட்டன் நகருக்கு 15 மணித்தியாலங்களே நீர் விநியோகிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மவுசாலை – காசல் ரீ மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றது.மொனராகலை நகரை அண்மித்த சில பகுதிகளுக்கான நீர் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டின் நீர் தேவையின் 55 வீதம் இயற்கை நீர் நிலையங்கள் மூலமே பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

தொடரும் நிலமையின் கீழ் பிரதான நீர் தேக்கங்களின் மின் உற்பத்தியினை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை இணக்கம் தெரிவித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் குறிப்பிட்டார்

புதிதாக 400 குழாய் கிணறுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் மேலும் 1000 குழாய் கிணறுகளை புனரமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

water

Related posts: