நல்லூரில் வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும் அதிக தொகை நிதி வசூலிப்பு: கண்டும் காணாத மாநகர சபை அதிகாரிகள்!

Wednesday, August 31st, 2016

நல்லூரில் வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் சில நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும்  பார்க்க அதிகளவில் பக்தர்களிடம் நிதி வசூலிப்பதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா கடந்த-08 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபையின் அனுமதியைப் பெற்று  வாகனத் தரிப்பு நிலையங்கள் ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் துவிச்சக்கர வண்டிகளிற்கு ஐந்து ரூபாவும், மோட்டார்ச் சைக்கிள்களுக்கு 10 ரூபாவும் கட்டணமாக அறவிடப்பட வேண்டுமென யாழ். மாநகர சபை அறிவுறுத்தியிருந்தது.  இந்த நிலையில் கொடியேற்றத் திருவிழா அன்றே சில வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் சைக்கிளுக்குப் பத்து ரூபாவும், மோட்டார்ச் சைக்கிளுக்கு 20 ரூபாவும் வசூலித்திருந்ததாக பக்தர்களால் யாழ். மாநகர சபையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து உடனடிச் சோதனையில் ஈடுபட்ட யாழ். மாநகர சபை அதிகாரிகள் அதிக கட்டணம் வசூலித்தவர்களைக்  கடுமையாக எச்சரித்தனர்.

எனினும், ஆலயத்தின் இரண்டாம் நாள் உற்சவம் முதல் மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும் அதிக தொகைக் கட்டணத்தைச் சில வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் அறவிட்டு வருகின்றன.

இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த யாழ். மாநகர சபையின் அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருப்பது தொடர்பில் பக்தர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் மாநகர சபையின் அதிகாரிகள்  இந்த விடயத்தில் மென்போக்குடன் செயற்படுவது அவர்கள் குறித்த வாகனப் பாதுகாப்பு நிலைய உரிமையாளர்களிடம் இலஞ்சம் பெற்றுள்ளார்களோ என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்

Related posts:

மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு ஒரு முட்டை – கல்வி அமைச்சக்கு பிரதமர் ஆலோசனை!
கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனித்துவமாக மாறாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் உறுத...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்பகுதியை உரிய ஆய்வின் பின் கடற்றொழிலுக்காக அனுமதிக்கப்...