உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகளுக்கு உடன்படப் போவதில்லை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, April 12th, 2023

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகளுக்கு உடன்பட போவதில்லை. பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்கு வழங்கப்பட்டுள்ள நீண்ட வரைவிலக்கணம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

சகல தரப்புடன் விரிவான பேச்சுவார்த்தையை தொடர்ந்து சட்டமூல வரைபு திருத்தம் செய்யப்படும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ள ஒருசில ஏற்பாடுகளுக்கு இணங்க போவதில்லை. ஒருசில ஏற்பாடுகள நிச்சயம் திருத்தப்பட வேண்டும் என்பதை அமைச்சரவை கூட்டத்தின் போது எடுத்துரைத்துள்ளேன்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில்  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் புதிய வரைபை தயார் செய்தோம்.

நாங்கள் தயார் செய்த சட்டமூல வரைபு தற்போது வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லை. இருப்பினும் நாங்கள் அறிமுகப்படுத்திய ஏற்பாடுகள் புதிய வரைபில் உள்வாங்கப்பட்டுள்ளன.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபின் ஒருசில ஏற்பாடுகளுக்கு இணங்க போவதில்லை. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேக நபரை தடுத்து வைக்கும் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் அல்லது நீதிமன்றம் இருக்க வேண்டும்.

பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்கு நீண்ட வரைவிலக்கணம் வழங்கப்பட்டுள்ளது. சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்பட பலவிடயங்கள் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்படலாம். ஆகவே பயங்கரவாதம் என்ற சொற்பதத்துக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் சகல தரப்புடன் விரிவான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும்.சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகள் திருத்தம் செய்யப்பட்டு நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: