கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனித்துவமாக மாறாது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் உறுதி!

Saturday, April 17th, 2021

கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனித்துவ ஆட்சிக்குள் கொண்டுவரப்படமாட்டாது என தெரிவித்துள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு தொடர்பிலான சட்ட மூலம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை அரசியல்வாதிகள் சமூகத்தின் மத்தியில் தோற்றுவித்துள்ளார்கள்.

கொழும்பு துறைமுக நகர செயற்திட்டம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின்னர் முன்னெடுக்கப்படவில்லை. 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் காலி முகத்திடலின் கடற்பரப்பில் 644 ஹெக்டயார் நிலப்பரப்பு மணலால் நிரப்பட்டு அபிவிருத்தி செயற்திட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் இலங்கையின் மொத்த பரப்பளவில் மாற்றம் ஏற்பட்டது.

கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி அப்போதைய முன்னாள் உள்ளுராட்சின்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன விசேட வர்த்தமானி வெளியிட்டார்.

கொழும்பு துறைமுகம் நகர செயற்திட்ட பணிகள் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2018 ஜனவரி மாதம் 3 ஆம் திகதி துறைமுக நகரம் தொடர்பிலான நடவடிக்கைகள் உள்ளடக்கிய பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் பத்திரம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன்.செயற்திட்ட பூர்த்திக்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சட்ட மூலம் நாடாளுமன்றில் கடந்த 8 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே கொழும்பு துறைமுக நகரம் தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் 2014 ஆம் ஆண்டிலிருந்து கட்டம் கடட்டமாக நாடாளுமன்றத்தை தொடர்புப்படுத்தி முறையாக முன்னெடுக்க்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நீதியமைச்சின் சட்டம்மூலம் சபைமுதல்வரினால் கடந்த8 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சர்வதேச வர்த்தகம் கப்பற் தொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள் கரை கடந்த வங்கித் தொழில் நிதிசார் சேவைகள் தகவல் தொழினுட்பம் வியாபார வழிமுறைகள், வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தல் கூட்டிணைக்கப்பட்ட தலைமையங்களின் தொழிற்பாடு.

பிராந்திய விநியோக தொழிற்பாடுகள் சுற்றுலா பயணத்துறை மற்றும் வேறு துறை சேவைகளை மேம்படுத்துவது ஆணைக்குழுவின் நோக்கமாகும். இச்சட்டமூலம் குறித்து தவறான கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.

இலங்கையின் பொருளாதாரம் பல்வேறு காரணிகளினால் மந்தகதியில் காணப்படுகிறது. நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார விசேட ஆணைக்குழுவை ஸ்தாபிக்காமல் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க முடியாது.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ்வாறான தன்மை காணப்படுகிறது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் பொதுச்சட்டத்துக்கு உட்பட்டதாகவே காணப்படும்.

நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 தொடக்கம்7 ஆக காணப்படும் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார். ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் மாற்றம் ஏற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு இவ்விடயத்தில் ஜனாதிபதி தற்துணிவுடன் செயற்படலாம்.

கொழும்பு துறைமுக நகரம் ஆசிய பிராந்தியத்தின் பிரதான வலயமாக காணப்படுவதால் ஒரு சில வரிச்சட்டங்கள் மாத்திரம் வியாபார நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் வருவாய்க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக காணப்படும். ஸ்தாபிக்கவுள்ள விசேட ஆணைக்குழுவனை கண்காணிக்கும் பொறுப்பு கணக்காளர் நாயகத்துக்கு உண்டு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட முடியாது.

மத்திய வங்கியினதும், நாடாளுமன்றத்தினதும் ஆலோசனைகளுக்கு அமையவே செயற்பட முடியும். கொழும்பு துறைமுக நகரத்தினால் 83 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் இலங்கையர்களுக்கு கிடைக்கப் பெறும். இத்துறைமுக நகரம் சீனாவின் காலணித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படுகின்றது என குறிப்பிடப்படுவது முற்றிலும் தவறானாகும்.

துறைமுக நகரம் தொடர்பில் 2014 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி , விசேட ஆவணங்கள் ஆகியவற்றில் எவ்விடத்திலும் சீனாவின் காலணித்துவ ஆட்சிக்கான அம்சங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் குறிப்பிடப்படவில்லை.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை சவாலுக்குட்படுத்தி 15 மனுக்கள் உயர்நீதிமன்றில் பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யபட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவின் காலணித்துவமாக்கும் சட்டத்துக்கு உயர்நீதிமன்றம் ஒருபோதும் அனுமதி வழங்காது. சீன காலணித்துவ அம்சங்களை உள்ளடக்கிய வகையில்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவில்லை.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஊடகங்களுக்கு மத்தியில் சீன காலணித்துவ ஆட்சி குறித்து கருத்துரைப்பவர்கள்.

உயர்நீதிமன்றில் சீன காலணித்துவ தர்க்கத்தை முன்வைக்க மாட்டார்கள். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அரசியல்வாதிகள் முதலில் விசேட பொருளாதார வலயம் தொடர்பில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்ட மூலம் தொடர்பில் முழுமையான தெளிவு பெறுவது அவசியமாகும் என்றார்.

000

Related posts: