கடற்றொழிலாளர் வாழ்வு மேம்பட வருமானங்களை முதலீடாக்கும் பொறிமுறை அவசியம் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் சுட்டிக் காட்டு!

Friday, August 4th, 2023

கடற்றொழில் மூலமான வருமானங்களை தமது கிராமத்துக்கான முதலீடாக்கிக் கொள்ளும் பொறிமுறையை  அனைத்து கடற்தொழிலாளர் அமைப்புகளும் கொண்டிருக்க வேண்டுமென மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்தார்.

பச்சிலை பள்ளி பிரதேசத்தின் கீழ் வரும் கிளாலி கடற்றொழிலாளர்கள் சங்கத்துக்கான புதிய நிர்வாக தேர்வுக்காக  கிளாலி பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களால் சீரான ஒரு நிர்வாகத்தை தேர்ந்து கொள்வதில் இச்சங்கம் எதிர்கொண்டிருந்த பல்வேறு சவால்களை கவனத்தில் எடுத்து உரையாற்றிய இணைப்பாளர் மேலும் தனது உரையில்;

உங்களுக்கான புதிய நிர்வாகத்தின் அவசியத்தை கவனம் செலுத்தி மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் மற்றும் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளரும் இங்கு கலந்து கொண்டிருப்பதை இச்சங்கத்துக்கான சிறந்த வழிகாட்டலுக்கான அடையாளமாக கருதி நீங்கள் செயற்பட வேண்டும்.

இக் கிராமத்தின் 90 வீதமான குடும்பங்களின் வாழ்வாதார தொழிலாக கடற்றொழில் அமைந்துள்ள நிலையில்  உங்களுக்கான கட்டுக் கோப்பான  உறுதியான சங்க நிர்வாகத்தை முறையாக  கட்டிக்காப்பதன் அவசியத்தை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

கிராமங்களின் அன்றாட செயற்பாடுகளின் ஊடான அதன் அசைவியக்கத்தில் அது கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் அதன் வழியான முரண்பாடுகளும் தவிர்க்க முடியாதவை.

கட்சி பேதங்களால் தொழிலாளர் அமைப்புகள் அலைக்கழிக்கப்படு வதும் அவ்வாறே உட்பிளவுக்கு உட்படும் ஆபத்தை எதிர் கொள்வதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகி விட்டன.

தொழிலாளர் நலன் சார்ந்து கிராமத்தின் பல்வேறு அவசிய அபிவிருத்திகளுக்காக திரட்டு நிதியை கையாளும்  கடற்றொழில் அமைப்புக்களின் ஆற்றல் சுயநல நோக்கில் இடைத்தர வர்த்தகர்களால் தொழிலாளர்கள் கூறுபடுத்தப்பட்டு இந்த அமைப்புக்கள் பலவீனப்படுத்தப்படும் நிலமைகள் பரவலாக அவதானிக்கப்பட் டுள்ளன.

வறுமையும் கல்வியறிவின்மையும் சேர்ந்து போதைப்பொருளுக்காக தமது வருமானத்தின் பெரும்பகுதியை இழக்கும் கடற்றொழிலாளர் குடும்பங்களின் அவலத்தை  நீங்கள் அனைவரும் மேலான கவனத்தில் எடுத்து  சிறந்த முன்னுதாரணமான தொழிற்சங்க தலைமைத்துவமாக நீங்கள் செயற்பட வேண்டும்.

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா அவர்களால் பல்வேறு நலத் திட்டங்கள் புதிய முதலீட்டு ஊக்குவிப்பு க்கள்  நாடுதழுவி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் அவர்களின் உதவித் திட்டங்களை உங்கள் அமைப்பும் பெற்றுக் கொண்டு அதன் பயனை அனைத்து தொழிலாளர்களும் அனுபவிப்பதற்கான ஏற்பாடாக  கிளாலி கடற்றொழிலாளர் சங்கம் அனைத்து உறுப்பினர்களையும் முறையாக உள்வாங்கி கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில்  கூட்டுறவு உத்தியோகத்தர்கள் மற்றும் பளை பிரதேச அமைப்பாளர் தோழர் ரீகன் உட்பட சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

000

Related posts: