எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்பகுதியை உரிய ஆய்வின் பின் கடற்றொழிலுக்காக அனுமதிக்கப்படும் – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் பணிப்பு!

Saturday, June 12th, 2021

விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பாணந்துறைமுதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பினை உரிய முறையில் ஆய்வு செய்த பின்னர் கடற்றொழில் நடவடிக்கைக்காக திறக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ துறைசார் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை, குறித்த கப்பலால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் வழங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுற்றுச்சூழல், மீன்வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி, கப்பல் தீயினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிடவும், குறித்த கப்பல் நிறுவனத்திடமிருந்து முழு இழப்பீட்டைப் பெறுவதற்கும், கப்பலை வெளியேற்றுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் இதன்போது அறிவுறுத்தியிருந்த பிரதமர் சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்..

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, ரோஹித அபேகுணவர்தன, அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர, நாலக கொடஹேவ மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், சட்டமா அதிபர் சஞ்சே ராஜரட்ணம், கடற்பதை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, அகியோருடன் துறைசார் தரப்பின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: