காக்கைதீவு மீள்சுழற்சி வளாகத்தில் மாநகர சபையின் கழிவு தண்ணீர் பரிகரிப்புத் தொகுதிப் பிரிவு திறப்பு!

Friday, November 3rd, 2017

யாழ்ப்பாண மாநகரசபையின் கழிவு தண்ணீர் பரிகரிப்புத் தொகுதி காக்கைதீவு மீள்சுழற்சியக வளாகத்தில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

சபையின் சொந்த வருமானத்தில் இருந்து ரூபா 27 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இந்தத் தொகுதி நாள் ஒன்றிற்கு 50-60 கன மீற்றர் தண்ணீரைப் பரிகரிக்கக்கூடியது.

இந்தக் கழிவு தண்ணீர் முற்றிலும் இயற்கையான நுண்ணங்கிச் செயற்பாடு மற்றும் சேதன இரசாயனத் தாக்கங்கள் என்பவற்றால் பிரிகையாக்கப்பட்டு தூய்மையாக்கப்பட்டு அதன் பின்னர் தெங்குப் பயிர்ச்செய்கை நிலத்துக்கு நீர்ப்பாசனம் செய்யப்படும்.

சேகரிப்புத் தொட்டி, தண்ணீர் ஊறாத தொட்டி, கட்டமைக்கப்பட்ட ஈரவலயம், தூய்மைப்படுத்தும் குளம், உலர்த்தும் நிலம் என்பவற்றுடன் கூடிய இந்தத் தொகுதி பற்றி மாணவர்கள் கற்பதற்குரிய வசதிப்படுத்துனர் ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிபாரிசுடன் அமைக்கப்பட்ட இத் தொகுதி மற்றைய உள்ளூராட்சிமன்றங்கள் பார்த்துக் கட்டக்கூடிய உதாரண அமைப்பாக இருக்குமென்பதை தெரிவித்து இந்தத் தொகுதி பற்றிய செய்முறை விளக்கத்தை இந்தச் செயற்றிட்டத்தின் ஆலோசகராகப் பணியாற்றிய விஞ்ஞான, கைத்தொழில் அராய்ச்சி அமைச்சின் கீழ் உள்ள கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி கலாநிதி பிரபாகர் வழங்கினார்.

Related posts: