தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் நான்கு நாட்கள் கூடுகிறது!

Friday, July 30th, 2021

தேர்தல்கள் மற்றும் தேர்தல் கட்டமைப்பு தொடர்பில் பொருத்தமான சீர்த்திருத்தங்களை அடையாளம் காணப்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுவிற்கு கிடைத்துள்ள யோசனைகளை ஆராய்வதற்காக ஐவரடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர், அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே தலைமையில் குறித்த ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி அனுர கருணாத்திலக்க, சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் பாலச்சந்திரன் கௌதமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் விசேட தெரிவுக்குழு கூடிய போதே, விசேட நிபுணர் குழுவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்த்திருத்தங்கள் தொடர்பில், 21 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், 155 சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களினால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் நான்கு நாட்கள் கூடவுள்ளதாக அதன் செயலாளரும், நாடாளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 6 அரசியல் கட்சிகள் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு முன்னிலையில் தமது நிலைப்பாட்டை நேற்றுமுன்தினம் முன்வைத்தன.

தேர்தல்களின் போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற விசேட குழுவில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் விருப்பு வாக்குமுறையுடன் பெண்கள் போட்டியிடுவது சிரமமானது என்றும், குடும்பப் பின்னணியின் ஊடாகவே பெண்கள் பெரும்பாலும் அரசியலுக்குள் நுழைகின்றார்கள் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் நாடாளுமன்றத்துக்குள் நுழைவது சிரமமானது என்றும் அவர் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

இதன்டையே முழுமையான தொகுதிவாரி முறையின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டால் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு எழுகிறது என்று அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குழுவில் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றை ஒரே நாளில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 06 அரசியல் கட்சிகள் தேர்தல் சட்ட மறுசீரமைப்புத் தொடர்பான குழு முன்னிலையில் நேற்றுமுன்தினம் தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்தன.

இதன்போது தமது நிலைப்பாட்டை முன்வைத்த இலங்கை லிபரல் கட்சியின் செயலாளர் கமல் நிசங்க குறிப்பிடுகையில், நியூசிலாந்தில் காணப்படும் தேர்தல் முறையைப் பயன்படுத்துவது பொருத்தமானது என்றும் கூறியுள்ளார்..

தமது கட்சி மாவட்ட விகிதாசார முறைக்கு எதிர்ப்பு என்றும், இருந்தபோதும் தேசியப்பட்டியல் முறையை அவ்வாறே பேணப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும்போது 160 பேரை தேர்தலின் மூலமும், 65 பேர் தேசிய பட்டியலின் ஊடாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவர் விக்னேஸ்வரன் இக்குழு முன்னிலையில் தனது நிலைப்பாட்டை முன்வைக்கையில், 30 வருடங்கள் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக வெளிநாட்டுக்குச் சென்ற 1.5 மில்லியன் பேர் தமது வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளதுடன் இது காலத்துக்குத் தேவையான விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் பெண் பிரதிநிதித்துவத்தை 30 வீதமாக உயர்த்த வேண்டும் எனவும் இது நாடாளுமன்றம், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பேணப்பட வேண்டும் என்றும் குறித்த கட்சிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வெளிநாடுகளில் உள்ள மற்றும் இடம்பெயர்ந்துள்ள தரப்பினரின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவதற்கு அவசியமான சட்டம் விரைவில் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: