கடந்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை- ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

Wednesday, November 27th, 2019


கடந்த அரசாங்கத்தினால் முறையான வேலைத்திட்டம் ஒன்று இல்லாத காரணத்தால், அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு பாடசாலைச் சீருடை வழங்குவதில் பிரச்சினை எழுந்துள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுமார் 43 இலட்ச பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கும் பணிகளானது ஒவ்வொரு வருடமும் மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு முன்னர் வழங்கப்பட்டு வந்தன.

இருப்பினும், எதிர்வரும் 29ஆம் திகதியுடன் இந்த வருடத்திற்கான மூன்றாம் தவணை நிறைவடைவதன் காரணமாக மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, கடந்த அரசாங்கம் இது தொடர்பில் முறையான ஒரு திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் தற்போது இந்த நிலை உருவாகி இருக்காது என்றும் ஆசிரியர்கள் சங்கம் சுட்டிக் காட்டியுள்து.

இது தொடர்பில் ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து வெளியிடுகையில், தற்போதைய அரசாங்கம் மாணவர்களுக்கான சீருடைகளை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இது தொடர்பில் முன்னாள் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களை தொடர்பு கொள்ள எமது செய்திச் சேவை மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

எவ்வாறாயினும், நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது மாணவர்களின் சீருடைகள் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி முடிவு எட்டப்படும் என்று கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

Related posts: