தெங்குச் செய்கையாளர்களை ஊக்குவிக்க வடக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள்!

Sunday, February 3rd, 2019

தெங்குச் செய்கையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இவ்வருடம் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டமானது வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு ஏக்கரில் 64 தென்னங்கன்றுகள் என்ற ரீதியில் மானிய அடிப்படையில் ஐம்பது ரூபாவிற்கு ஒரு தென்னங்கன்று வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஒரு மரத்திற்கு சேதனப் பசளை மானியமாக 125 ரூபாவும் மூன்று மாதத்திற்கு பின் 50 ரூபாவும் வழங்கப்படுவதோடு மொத்தமாக 175 ரூபா உரமானியத்திற்கு வழங்கப்படும்.

2017 – 2018 ஆண்டு காலப்பகுதியில் நடுகை செய்யப்பட்ட தென்னங்கன்றுகளுக்கு ஒரு மரத்துக்கு 50 ரூபா வீதம் பராமரிப்புச் செலவு வழங்கப்படும். இதற்கு தமது உறுப்பினர்களுடாக உறுதிப்படுத்த வேண்டும்.

தென்னை உற்பத்தியாளர்களுக்கு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தென்னை மர இடைவெளிகளில் வாழை, அன்னாசி, வெற்றிலை ஆகிய செய்கை நடவடிக்கையை ஊக்குவிக்கும் நோக்குடன் இத்திட்டம் செயற்படுத்தப்படும்.

தெங்கு பயிர்ச்செய்கையாளர்களுக்கு வறட்சி காலத்தில் நீரைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நீரை வீண்விரயத்தில் இருந்து தடுப்பதற்கும் குழாய் நீர்ப்பாசனத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தை பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் முதலில் தாமாகவே முன்வந்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். திட்டம் நிறைவடைந்ததும் அவர்களுக்கான காசோலை வழங்கப்படும்.

வடமாகாணத்திலுள்ள 8 ஆயிரம் அரச உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 ரூபா வுக்கு ஒரு தென்னங்கன்று வழங்கப்படவுள்ளதோடு யாழ். மாவட்டத்தில் 1800 பேருக்கு இத்திட்டத்தில் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.

யாழ். மாவட்டத்திலுள்ள கைவிடப்பட்ட பிரதேசங்கள், வீதியோரங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

வேலணை, காரைநகர் வீதியோரங்களில் நடுகை செய்யவென 2 ஆயிரத்து 300 தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.

யாழ். மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் அதனை அண்டிய பிரதேச வீதிகளுக்கு நடுகை செய்யவென இதுவரை 37 ஆயிரம் தென்னம் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய மரக்கன்றுகள் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளன.

வடமாகாணத்திலுள்ள கற்பக சங்கங்களில் உள்ள 16 ஆயிரம் பேருக்கு ஒருவருக்கு இரு தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்படுவதோடு யாழ். மாவட்டத்தில் 5 ஆயிரத்து 800 பேருக்கு இத்திட்டம் வழங்கப்படும்.

பாடசாலை மாணவர்களுக்கான திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பைகளில் அடைக்கப்பட்ட தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.

எனவே அரசாங்கத்தால் வழங்கப்படும் இத்திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி தெங்குச் செய்கையை ஊக்குவிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: