உருளைக்கிழங்கு விலைச் சரிவால் வடக்குச் செய்கையாளர்கள் பாதிப்பு!

Wednesday, February 21st, 2018

இறக்குமதியாகும் உருளைக்கிழங்குக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்று அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம். எந்தப் பதிலும் இல்லை. இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வடக்கிலுள்ள விவசாய அமைப்புக்கள் கோரியுள்ளன.

உருளைக் கிழங்குச் செய்கையில் உள்ளூரில் குறிப்பாக வடக்கில் சிறந்த அறுவடை கிடைத்துள்ளது. அவற்றைச் சந்தைப்படுத்தும்போது மிகக் குறைந்த விலைக்கே விற்க வேண்டியுள்ளது.

இறக்குமதியாகும் உருளைக்கிழங்கும் வடக்குச் சந்தைகளில் உள்ளமையே அதற்குப் பிரதான காரணமாகவுள்ளது. இறக்குமதி வரியை அதிகரித்தால் அல்லது அவற்றை வடக்கு மாகாணத்துக்கு இறக்குமதி செய்வதைத் தடுத்து நிறுத்தினால் வடக்கிலுள்ள உருளைக்கிழங்குச் செய்கையாளர்கள் அதிகளவில் வருமானம் பெறுவர்.

பயன் இல்லை வரி அதிகரிப்புத் தொடர்பில் அரச தலைவருக்குக் கடிதம் அனுப்பிப் பல வாரங்கள்கடந்துவிட்டன. அதற்கான பதில் அரச தலைவரிடமிருந்து இன்றுவரை கிடைக்கவில்லை.

இந்த விடயத்தில் அரச தலைவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடக்கிலுள்ள மாவட்டங்களின் விவசாய அமைப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதிக விளைச்சல் இந்தமுறை யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 816 மெற்றிக்தொன் உருளைக்கிழங்கு அறுவடையை எதிர்பார்ப்பதாக மாவட்டச் செயலக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருட உருளைக்கிழங்குச் செய்கைக்கான அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடந்த வருடங்களிலும் இந்தச் செய்கையில் ஆர்வம் காட்டினர். மானிய விலையில் உருளைக்கிழங்கு விதைகள் வழங்கப்பட்டன.

கடந்த வருடம் ஆயிரத்து 400 விவசாயிகள் 94 ஹெக்ரயரில் உருளைக்கிழங்கு செய்கையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஒரு அந்தர் விதை உருளைக்கிழங்கு அரை மானிய விலையில் 7 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்பட்டது. ஒரு விவசாயிக்கு நான்கு அந்தர் விதை உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது என்று மாவட்டச் செயலகத்தினர் தெரிவித்தனர்.

திருநெல்வேலி, சுன்னாகம், மருதனார்மடம், அச்சுவேலி, புன்னாலைக் கட்டுவன், ஊரெழு, பண்டத்தரிப்பு, ஆவரங்கால், நீர்வேலி ஆகிய பிரதேசங்களில் அறுவடை நடக்கின்றது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு 40 ரூபா முதலே வியாபாரிகள் கொள்வனவு செய்கின்றனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Related posts: