தனியார்துறை ஊதிய உயர்வு வெறும் எழுத்து மூல ஆவணம்தானா? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Friday, March 11th, 2016

தனியார்துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா ஊதிய உயர்வு வழங்கப்படுமென இந்த அரசு தனது நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் அறிவித்திருந்தது. இன்று அந்த நூறு நாட்கள் கடந்து, தேர்தலின் பின்னர் புதிய அரசும் ஆட்சிபீடமேறி, பல மாதங்கள் கடந்த நிலையிலும் குறிப்பிட்ட ஊதிய உயர்வு வெறும் எழுத்தளவில் மாத்திரமே உள்ளதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், அரச துறை சார்ந்த ஊழியர்களுக்கு அரசுகள் அவ்வப்போது ஊதிய உயர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்ற போதிலும், தனியார்த்துறை ஊழியர்களுக்கு அந்த வாய்ப்புக்கள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வருகின்றன.

அரச துறையில் நாட்டில் வேலைவாய்ப்பற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்புக்களை வழங்கக்கூடிய சாத்தியப்பாடுகள் இல்லாத நிலையில், வேலைவாய்ப்பற்றவர்கள் அதிகளவில் தனியார்த்துறையினையே நாட வேண்டியுள்ளது.

இந்த நிலையில், தனியார்துறையானது அந்தந்தக் காலகட்டங்களில் வாழ்க்கைச் செலவினங்களுக்கேற்ப ஊழியர்களுக்கு ஊதிய அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இவ்விடயம் தொடர்பில் வலியுறுத்தியும், தனியார்த்துறை இதனைக் கண்டுகொள்ளாமல் உள்ளதெனில், அதற்கொரு தேசிய பொறிமுறையை உருவாக்க அரசு முன்வர வேண்டும்.

அவ்வாறின்றி, வெறும் எழுத்து மூல ஆவணங்களால் தனியார்த்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பில் எப்பயனும் ஏற்படப்போவதில்லை என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: