வெலிக்கடைப் படுகொலைக்கு நியாயம் வேண்டும் : நானே சாட்சியாகிறேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Wednesday, July 24th, 2019

1983இல் நடந்த இரத்த யூலையின் வடுக்களில் ஒன்றான வெலிக்கடைப் படுகொலை நாட்களை நான் நினைத்துப்பார்க்கிறேன். விழிகளில் நீரையும் நெஞ்சில் நெருப்பையும் விதைத்துச்சென்ற அந்த இரத்தம் தோய்ந்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன்.

1977இல் நடந்த இனப்படுகொலையில் எம் தமிழ் உறவுகள் கொன்று பலியாக்கப்பட்டபோது கொழும்பில் நின்று என்னால் முடிந்தளவு எம் தமிழ் உறவுகளைப் பாதுகாத்திருக்கிறேன்.

எனது பெரிய தந்தையாகிய தொழிற் சங்கவாதியான கே.சி. நித்தியானந்தா அவர்களால் உருவாகக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஊடாக லங்கா ராணி எனும் கப்பலில் ஏற்றி எமது மக்களை தமது சொந்த வாழ்விடங்கள் நோக்கி அனுப்புவதில் முன்னின்று உழைத்திருந்தேன்.

ஆனாலும் 1983இல் நடந்த இரத்த யூலைப் படுகொலையின் போது தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடியவன் என்ற குற்றச்சாட்டில்.. ஏற்கனவே நான் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.

வீதிகளில் மட்டுமன்றி வீடுகள் புகுந்தும் நடத்திய கொலை வெறியாட்டத்தில் நாம் சிறைப்பட்டிருந்த வெலிக்கடைச் சிறையும் தப்பவில்லை. எமது வீரமிகு போராளிகளையும் தலைவர்களையும் வெலிக்கடையில் வேட்டையாடிய கோரங்களை நேரில் கண் கண்ட சாட்சிகளில் ஒருவனாக இன்று நானும் இருக்கின்றேன்.

நான் மட்டுமன்றி என்னுடன் கூடவே நின்று வீரமுடன் வெலிக்கடையில் களமாடி இன்று என்னுடன் கூடவே பயணித்து வரும் தோழர் பனாகொடை மகேஸ்வரன் அவர்களும் அதற்குச் சாட்சியாக இருக்கின்றார்.

எம் தேச விடுதலைப் போராளிகளில் 53 பேர்கள் அதில் கொல்லப்பட்டிருந்தார்கள். எம்மைக் கொல்ல வந்த காடையர்களை எதிர்த்து நானும் என்னுடன் கூட இருந்தவர்களும் அன்று மூர்க்கத்தனமாகப் போராடியிருக்காவிட்டால் இன்னும் பலர் அந்தச் சிறையில் கொல்லப்பட்டிருப்பார்கள்.

நானும் அன்று கொல்லப்பட்டிருந்தால். இன்று நாதியற்ற எமது மக்களுக்கு நீதி கேட்டு யதார்த்த வழிமுறையில் நின்று உழைப்பதற்கான வாய்ப்பை நான் இழந்திருப்பேன்.

தர்மம் தலைகாக்கும் என்பது எம் முன்னோர்களின் முது மொழி! என்னவோ தெரியாது வெலிக்கடை படுகொலையில் இருந்து அடுத்தடுத்து என்னைத் தேடிவந்த மரணங்களை வென்று இன்னமும் எனது மக்களுக்காக நான் உழைத்துக்கொண்டே இருக்கின்றேன்.

வெலிக்கடைப் படுகொலை எமது விடுதலை வேள்வியை நெய் ஊற்றி வளர வைத்தது. அன்று நாம் போராடப் புறப்பட்டதன் நியாயங்களை உலகத்தின் விழிகளில் நீதியென நிமிர வைத்தது. எங்கெல்லாம் எவரால் படுகொலைகள் நடத்தப்பட்டனவோ அதற்கெல்லாம் பாரபட்சமற்ற நீதி விசாரணைகள் நடத்தப்படவேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

அந்த வகையில் வெலிக்கடைப் படுகொலைக்கும் நீதி விசாரணை வேண்டும் என்று நான் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றேன். அதற்குச் சாட்சி சொல்ல நான் என்றும் எமது தமிழ்த் தேசிய இனத்தின் சார்பாகத் தயாராகவே இருக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற ஜுலைப் படுகொலை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வேடனின் கையில் இருந்து விடுவித்துக் கொண்டு கசாப்புக் கடைக்காரனை தஞ்சமடையும் முயல் குட்டிகளே விழித்திருங்கள்! இவ்வாறு நம் தேசத்துக் கவிஞன் ஒருவன் பாடிய கவிதையொன்றைச் சுட்டிக்காட்டி அன்றே நான் கூறிவைத்த சிந்தனையை இன்றும் நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

இரத்த யூலையின் வடுக்களையும் வெலிக்கடைப் படுகொலையின் துயர்களையும் நாம் துடைத்தெறிய வேண்டுமாயின் மதிநுட்ப சிந்தனை வழி நின்று சாணக்கியமாகவும் சாதுரியமாகவும் சகல தமிழ்க் கட்சித் தலைமைகளும் உழைக்க வேண்டும். தேர்தல் வெற்றிக்காக அன்றி தமிழர் தேசத்தின் உரிமையின் வெற்றிக்காக ஒன்றுபட வேண்டும்.

வரலாற்றை நினைவு கூராதவர்கள் மீண்டும் மீண்டும் அவற்றை அனுபவிக்கும் படி சபிக்கப்படுவார்கள்!.. இந்த பொன்மொழியை உணர்ந்து வெலிக்கடைப் படுகொலை நாளை ஆண்டு தோறும் நினைவேந்தி வரும் சகலருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!…

மக்களின் அவலங்களைச் சொல்லித் தொடர்ந்தும் எவரும் இங்கு அழுதுகொண்டிருப்பதில் அர்த்தமில்லை. யாரும் வந்து சுயலாப அரசியல் நடத்துவதற்காக எமது மக்களும் போராளிகளும் குருதியில் சரியவில்லை.

இனியுமொரு இரத்தப்பலி.. இனியுமொரு யுத்த அவலம்… இங்கு வேண்டாம்…. அதைத் தாங்கும் சக்தி எமது மக்களுக்கு இல்லை. கொன்று பலியாக்கப்பட்ட எமது தேச விடுதலைப் போராளிகள் பொதுமக்கள் தலைவர்கள் அனைவருக்கும் நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தமிழ் மக்களுக்கு ஓர் அழகார்ந்த உரிமை வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதேயாகும்.

Related posts:


அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் - டக்ளஸ் ...
கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்பு வேண்டும் - இந்தியத் தூதுவரிடம் கடற்றொழில் அமைச்சர் கோரிக்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...