13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமாகும் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 8th, 2017

எமது தேசியப் பிரச்சினைக்கானத் தீர்வைப் பொறுத்த வரையில், தற்போது எமது அரசியல் யாப்பில் அடங்கியுள்ளதும், எமது நாட்டில் நடைமுறையில் அனுபவிக்கப்பட்டு வருவதுமான13வது சீர்திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதை ஆரம்பமாகக் கொண்டு அதனை ஆரம்பிக்க வேண்டும். பின்னர், இனங்களிடையே ஏற்படக்கூடிய பரஸ்பர நம்பிக்கைகளின் அடிப்படையில் படிப்படியாக அதிகாரப் பரவலாக்கல்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும், இதைவிட அதிகம் சாதகமான தீர்வுகள் எமது மக்களுக்குக் கிடைக்கக்கூடிய ஏற்பாடுகள் எட்டப்படுமானால் அதனை நாங்கள் வரவேற்போம்.

எமது இந்த 13வது சீர்திருத்தத்திலிருந்து ஆரம்பிக்கின்ற அரசியல் தீர்வினையே இன்று அதிமேதகு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, எமது நாட்டில் எதிர்காலங்களில் ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் கொள்கை மாற்றங்களால் எமது நாட்டில் இனங்களுக்கிடையில் மீண்டுமொரு மோதல் நிலையை உருவாகக் கூடாது என்பதில் நாம் மிகுந்த அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி,

இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் தொடர்ந்தும் நாம் பாரிய பங்களிப்புக்களை ஆற்றி வருகின்றோம். பாரிய அர்ப்பணிப்புகளுக்கு, இழப்புகளுக்கு, சேறு பூசல்களுக்கு, போலி குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியும், இத்தடைகளை எல்லாம் மீறி, தேசிய நல்லிணக்கத்திற்காக செயற்பட்டு வருகின்ற நாம், இன்று முன்வைத்துள்ள தனி நபர் பிரேரணையை அனைத்து தரப்பினரும் இதய சுத்தியுடன் ஏற்று, அதனை செயற்படுத்தி, எமது நாட்டில் எமது மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேசிய நல்லிணக்கத்தை உணர்வுப்பூர்வமாகக் கட்டியெழுப்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

Related posts: