நாம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தபோது எம்மை விமர்சனம் செய்தோர்  இன்று அபிவிருத்திப் பணிகளில் தம்மை  இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்!

Thursday, August 25th, 2016

– காலம் கடந்த ஞானம் என்கிறார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!-

எமது மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினைக்கு நடைமுறை சாத்தியமான வகையில், நிலையான தீர்வினைப் பெற்றுக் கொள்ள நாம் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததுடன், பல வருடகாலமாக யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளினால் பாதிக்கப்பட்டிருந்த எமது மக்களையும், எமது பிரதேசங்களையும் கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மும்முரமாக முன்னெடுத்திருந்த நிலையில், எம்மைப் பார்த்து விமர்சனங்களை முன்வைத்தோர் இன்று தங்களின் இயலாமைக்கு மத்தியில் அதே அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதைத்தான் காலம் கடந்த ஞானமென்பது. இந்த ஞானம் இப்போதாவது இவர்களுக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும், சந்தேகமும் நிலவுகிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், எமது மக்களின் தீர்க்கப்பட வேண்டிய தேவைகள் பல உள்ள நிலையில் நாம் கடந்த காலங்களில் அவற்றை இனங்கண்டு, படிப்படியாகத் தீர்த்து வந்துள்ளோம். அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வாக நாம் தீர்வுத் திட்டத்தையும் ஆரம்பம் முதல் முன்வைத்து அது தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடி வந்துள்ளோம். அதில் ஆரம்ப கட்டமாக 13வது அரசியலாப்பினை முழுமையாக அமுல்படுத்தும்படி வலியுறுத்தியிருந்தோம்.

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அதன்போது எமது மக்களுக்கு பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை வழங்கியவர்கள் அதன் ஆட்சிப் பொறுப்பினை கைப்பற்றியபொழுது, ‘மலர்ந்தது தமிழர் ஆட்சி’ என பத்திரிகை தலையங்கம் எழுதியவர்கள் இன்று அந்த மாகாண சபையின் ஊழல் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படாவிடினும், நாட்டின் ஏனைய மாகாணங்களில் செயற்பட்டு வருகின்ற மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் வகையிலான அதிகாரங்கள் வடக்கு மாகாண சபைக்கும் வழங்கப்பட்டது. எனினும், மக்கள் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ள வடக்கு மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை எனக் கூறிக் கொண்டிருந்தவர்களுக்கு மக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்த எங்கிருந்து அதிகாரம் கிடைத்தது என மக்கள் கேள்வி கேட்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

நாம் தேசிய நீரோட்டத்திற்கு வந்த அன்று தொட்டு இன்றுவரை வடக்கில் மேற்கொண்டுள்ள அபிவிருத்திப் பணிகளை அனுபவித்துக் கொண்டு,  இதுவரை எந்த மக்கள் பணிகளையும் மேற்கொள்ளாமல் வீண் கதைகளைப் பேசி தங்களது சுயலாப அரசியலுக்காக எமது மக்களைத் தூண்டிக் கொண்டிருந்தவர்கள், இன்று அதே மக்களால் துரத்தப்படக்கூடிய நிலை உருவாகியுள்ள சூழலில், அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கதைக்க முற்பட்டுள்ளனர். எனினும், இதற்கு இவர்கள் கூறும் காரணமானது, மீண்டும் எமது மக்களை ஏமாற்றுகின்ற வித்தையாகவே உள்ளது.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் இந்த அரசின் முக்கியஸ்தர்களுடன் கதைத்து விட்டோம் சமஷடி முறையை தருவதாக அவர்கள் வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். வடக்கையும், கிழக்கையும் இணைப்பதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். எனவே, எமக்கு அது கிடைக்குமெனக் கூறி, எமது மக்களிடம் வாக்கு கேட்டு வெற்றியும் பெற்றனர். பின்னர் சமஷ;டி தருவதாக இவர்களுக்கு வாக்குறுதி வழங்கியதாக இவர்களால் கூறப்பட்ட தரப்பினர் அதனை பகிரங்கமாகவே நிராகரித்து விட்டனர். எனவே, இவர்கள் அந்தத் தரப்பினருடன் கதைத்து, அவர்கள் அதற்கு இணங்கியதாக இவர்கள் எமது மக்களுக்குக் கூறியது பொய்யான கதை என்பது புலப்படுகின்றது.

இந்த நிலையில், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அரசு மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களில் பங்கெடுப்பதாகக் கூறுகின்றனர். அதே நேரம் இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ;டி முறையான தீர்வே அவசியம் என்றும் அறிக்கை விடுகின்றனர். அரச தரப்பு அதனை நிராகரித்துள்ள நிலையில், இவர்கள் கூறுவதைப்போல், மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன? இதனை இவர்கள் எமது மக்களுக்குத் தெரிவிப்பார்களா? அல்லது இதனையும் மூடி மறைத்துவிட்டு, ராஜதந்திரம் எனக் கதை விடுவார்களா? இப்படியெல்லாம் மூடிமறைத்து, திரை மறைவில் காய்களை நகர்த்தியே எமது மக்களை முள்ளிவாய்க்கால்வரை கொண்டு சென்று கொல்லக் கொடுத்ததும் இவர்களது ராஜதந்திரமா? என செயலாளர் நாயகம் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வன்முறை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – டக்ளஸ்...
இளைஞர் யுவதிகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அடித்தளத்தை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் – டக்ளஸ...