மகத்தான மனிதர் அமரர் அப்துல் கலாம்!

Sunday, June 19th, 2016

யாழ்ப்பாண மண்ணில் முன்னாள் இந்திய ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அறிவுப்பெருமகன் அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவுச் சிலை அமையப்பெறுவதை தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரது பதிவில் –

இலங்கைக்கு அப்துல் கலாம் அவர்கள் 2012ஆம் ஆண்டு முதலாம் மாதம் 22ஆம் திகதி வருகை தந்திருந்த போது, சாதி, மத பேதங்களைக் கடந்து இலங்கை மக்கள் அனைவருமே வரவேற்றார்கள்.

குறிப்பாக மாணவச் செல்வங்களின் உதாரண புருஷராக அமரர் அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்தார். அவர் யாழ்ப்பாணத்திற்கு 23.01.2012 அன்று வந்திருந்தபோது அவரை சந்திக்கக்கிடைத்த நிமிடங்கள் பெருமைக்குரியவை.

யுத்த இழப்புக்களுக்கு முகம் கொடுத்த ஈழத் தமிழ் மக்கள் குறித்து அப்துல் கலாம் அவர்களின் மனித நேயம் நிறைந்த விசாரிப்புக்களும், மீண்டும் தமிழ் மக்கள் எழுந்து நிற்கவேண்டும் என்று அவர் வெளிப்படுத்திய உணர்வுகளும் என்றும் எனக்குள் பசுமையாக இருக்கும்.

சமூகத்தில் வலுவிழந்தவர்களையும், சிறுவர்களையும் நேசிக்கும் அவரது கருணையையும், வார்த்தைகளில் குறையாத அன்பையும் அவரிடம் கண்டேன். அவரது புகழும், அவர் விட்டுச் சென்ற பதிவுகளும் மண்ணில் மறையாது.

உலகில் தலை சிறந்த கல்விமானாக வாழ்ந்த அமரர் அப்துல் கலாம் அவர்களின் உருவச் சிலையை யாழ்ப்பாண நூலகத்தில் அமையச் செய்திருப்பது பொருத்தமாகும்.

ஆசியாவிலேயே சிறந்த நூலகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாண நூலகத்திற்கு அமரர் அப்துல் கலாம் அவர்களின் உருவச் சிலை ஒரு பொற் கிரீடமாக அமைந்துள்ளது.

வன்முறையாளர்களால் எரிக்கப்பட்ட யாழ்.நூலகத்தை சாம்பரிலிருந்து மீண்டும் கட்டியெழுப்பி எமது எதிர்காலச் சந்ததியினர் பயன்பெறும்வகையில் ஆக்கச் சின்னமாகவும், அறிவுச் சின்னமாகவும் தூக்கி நிறுத்த நான் முயற்சித்தபோது அதைத் தடுத்து நிறுத்த முயற்சித்ததோடு எரிக்கப்பட்ட நூலகத்தை அழிவுச் சின்னமாக வைத்திருந்து எமது எதிர்காலச் சந்ததியினருக்கு காட்டவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்போர் கங்கனம் கட்டி நின்றார்கள்.

அவர்களின் எதிர்ப்பையும் மீறி சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் நான் அமைச்சராக இருந்ததைப் பயன்படுத்தி யாழ். நூலகத்தை எமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வடிவமைப்பைப் பாதுகாத்து ஆக்கச் சின்னமாகவும், அறிவுச் சின்னமாகவும் புனரமைப்புச் செய்திருந்தேன்.

ஆக்கத்திற்கும், அறிவுக்கும் உன்னத அடையாளமாகத் திகழ்ந்த பெருமகன் அப்துல் கலாம் அவர்களின் நிலை யாழ். நூலகத்திற்குள் அமையப்பெறுவது சாலப் பொருத்தமாகும் என தெரிவித்துள்ளார்.

13427759_1759467337661466_3695347814237905901_n

13450767_1759467614328105_7157622914591835239_n

Related posts:

தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் ...
அடைய முடியாத இலக்கை விடுத்து இணக்க அரசியலுடன் கைகோருங்கள்: பருத்திதுறையில் அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!
கையேந்தாத வெற்றியை நோக்கிச் செல்லும் சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – தே...