வெளிச்சமான பயணத்தில் மீண்டும் இருளுக்கு வித்திடுவது அவரவர் தத்தமக்கே கரி பூசிக் கொள்வது போன்றது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, February 9th, 2024

வெளிச்சமான பயணத்தில் கறுப்புக் கொடிகளைக் காட்டி, மீண்டும் இருளுக்கே வித்திடுவது, வரலாற்றில் அவரவர் தத்தமக்கே கரி அள்ளிப் பூசிக் கொள்வது போன்ற செயலாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் இன்றையதினம் (09.02.2024) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இச்சாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை மிக அதிகளவில் வலியுறுத்தி வருகின்றவர்களில் நாங்களும் உள்ளடக்கம். தேசிய நல்லிணக்கத்தின் மூலமே எமது அன்றாட பிரச்சினை முதல் அரசியல் பிரச்சினை வரையில் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள இயலும் என்பதில் நம்பிக்கை வைத்து, இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின் நாம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டோம்.

அந்த வகையில் எமது அனைத்துப் பிரச்சினைகiயும் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளக்கூடியதொரு காலம் மீண்டும் கனிந்து வந்துள்ளதாகவே எனது அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்டுள்ளேன்.

ஒரு பக்கத்தில் இந்த நாட்டின் பொரளாதார மீட்சிக்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன், தேசிய நல்லிணக்கம் கருதிய ஜனாதிபதி அவர்களது முயற்சிகளும் பாராட்டத்ததக்கதாகவே இருக்கின்றன.

அண்மையிலே வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்திருந்த அவர், எமது மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது தொடர்பில் காட்டிய அக்கறையினை நாம் மறந்துவிட முடியாது.

மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றவர். இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர் மிக நன்றாகவே அறிந்து வைத்திருப்பவர்.

குறிப்பாக சர்வதேச உறவுகள் தொடர்பில் இறுக்கமான இணைப்பு கொண்டவர். இந்த நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களாக, இந்த நாட்டு மக்கள் மீது பற்றுடையவர்களாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றவர்கள், உண்மையிலேயே அத்தகைய அக்கறையும், பற்றும் இருப்பின் இந்த நாட்டை மீட்டெடுக்கின்ற ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும்.

இதேவேளை ஓன்றுமில்லாத ஒரு காலகட்டத்தில், ஒன்றுமில்லாததற்காக திரண்டிருந்தவர்கள், எல்லாம் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் அவற்றை நியாயமான விலைகளில் பெறுவதற்கான வழிகளை அமைப்பதற்கு முன்வர வேண்டும்.

பிரச்சினைகளை தீர விடாமல் வழி பார்த்துக் கொண்டு, அதையே ஊதி, ஊதி பெருப்பித்துக் கொண்டிராமல், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் இருக்கின்ற நிலையில், அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காக முன்வர வேண்டும்.

போகின்ற வழி கடுமையானது எனினும், போய்ச் சேர்கின்ற இடம் இனிமையானது. இதில் நாம் அனைவரும் பங்கேற்றால் நமக்கு நாமே விளக்காவது போல் இந்த நாடு நமக்கு விளக்காகும்.

இந்த வெளிச்சமான பயணத்தில் கறுப்புக் கொடிகளைக் காட்டி, மீண்டும் இருளுக்கே வித்திடுவது, வரலாற்றில் அவரவர் தத்தமக்கே கரி அள்ளிப் பூசிக் கொள்வது போன்ற செயலாகும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்துக் கொண்டே, தாங்கள் மட்டும் அரசாங்கத்தின் பின்பக்கக் கதவினால் நுழைந்து சுய ஆதாயம் பெறுகின்றவர்கள், எமது மக்களுக்கான அரசாங்கத்தின் முன்பக்கக் கதவினை அடைத்துக் கொண்டு நிற்பது வேதனைக்குரிய விடயமாகும்.

எனவே, ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் சுயலாபம் என்ற சொல்லை விடுத்து, எமது மக்களுக்கான பொதுலாபம் என்ற ரீதியில் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: